முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் இன்று (ஜனவரி 27) கோலாகலமாகக் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பழனி மலை அடிவாரத்தில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி முருகன் கோயிலில் இன்று குட முழுக்கு நடைபெற்றது. ஆனால் மலைக் கோயிலில், 4000 விஐபிகள் 2000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் கோயில் அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் எல்.இ.டி. திரை மூலம் விழாவை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குடமுழுக்கை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு 8ஆம் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை, கந்தபுராணம், கட்டியம், திருப்புகழ் பாடப்பட்டது.
இதையடுத்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி பச்சைக்கொடி காட்ட, தமிழில் மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம், தங்க விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

குடமுழுக்கை முன்னிட்டு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 7 இடங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன் கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரியா