வாச்சாத்தி வழக்கில் அரசு அதிகாரிகள் மீது தமிழக அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 2011-ஆம் ஆண்டு தர்மபுரி நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வழங்கிய தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“தர்மபுரியில் 20.6.1992 முதல் மூன்று நாட்களுக்கு வாச்சாத்தி கிராமத்தில் வனத்துறை, காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு இன்றைய தேதி வரை அரசு அதிகாரிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
1995-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்ல சிவம் தாக்கல் செய்த நீதி பேராணை மனுவில் தான் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ நடத்திய விசாரணையில் 269 குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அந்த தண்டனைக்கு எதிராக 27 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது 54 குற்றவாளிகள் இறந்துவிட்டனர். 27 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகள் தள்ளுபடி செய்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதில், ரூ.5 லட்சத்தை குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டு. அப்போதைய மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, மாவட்ட வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
மலைக்கிராமத்தில் சம்பவம் நடந்த பிறகு ஒரு கிராம மக்கள் கூட அங்கு இல்லை. அனைவரும் மலை பகுதிக்குள் சென்று விட்டார்கள். அப்போதிருந்த தமிழக அரசு கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்தார்கள். அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நிவாரணம் வழங்கி கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
மாற்றுத்திறனாளி வயிற்றில் கண்ணாடி பாட்டில்: வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்