பணி ஓய்வு பெறுவதற்கு ஒருநாளுக்கு முன்னதாக ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் எஸ்.ஐ-யாக 1997-ல் பணியில் சேர்ந்தவர் வெள்ளதுரை. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் எஸ்.ஐயாக முதன்முதலில் பணியில் சேர்ந்தார்.
2003ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் அயோத்திகுப்பம் வீரமணி என்ற ரவுடியை வெள்ளதுரை டீம் பிடிக்க சென்றபோது, அவர் போலீசாரை திருப்பித் தாக்கியதால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2004ல் வீரப்பன் இருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று அவரை என்கவுண்ட்டர் செய்த சிறப்பு படையில் இடம் பெற்றவர் இந்த வெள்ளதுரை.
இதுவரை 12 எண்கவுண்ட்டர்களை செய்திருக்கிறார்.
2021 திமுக ஆட்சிக்கு வந்த போது, சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகளை கண்காணிக்க வெள்ளதுரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்றுடன் (மே 31) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்து மாநில உள்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஏன் சஸ்பெண்ட்?
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த கொக்கி குமார் என்கிற ராமு என்ற விசாரணை கைதி மரணமடைந்த விவகாரத்தில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பாச்சேத்தி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் 500 ரூபாய் வழிப்பறி செய்ததாக கொக்கிகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையில் போலீசார் சென்று கைது செய்தனர்.
அப்போது, போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற கொக்கிகுமார் குழியில் விழுந்து அடிப்பட்டதாகவும், ராஜாஜி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அப்போது மானாமதுரை டிஎஸ்பி யாக வெள்ளதுரை பணியாற்றினார்.
2012ஆம் ஆண்டு நடந்த குருபூஜையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பாச்சேத்தி எஸ்.ஐ ஆல்வின் சுதனை வெட்டி கொலை செய்ததால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட பிரபு மற்றும் பாரதி ஆகியோரின் நெருங்கிய கூட்டாளிதான் இந்த கொக்கிகுமார்.
இவரது மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் எஸ்.கீதா கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்தசூழலில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Share Market : தொடர் சரிவில் பங்குச்சந்தை… பேடிஎம் பங்கு உயர்வு!
சூரிய உதயத்தை ரசித்த மோடி… இரண்டாவது நாளாக தியானம்!