அதிமுக பொதுக்குழு வழக்கை மதிய உணவு இடைவேளை எதுவும் இல்லாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து நடத்தினர்.
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 3 ஆவது நாளாக, நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, கிருத்திகேஷ் ராய் அமர்வு முன் இன்று (ஜனவரி 6) நடைபெற்றது.
இன்றைய தினம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணையை மதிய உணவு இடைவேளை இல்லாமல் நீதிபதிகள் நடத்தினர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீண்ட வாதங்கள் வைக்கப்பட்டன.
அதில், “திமுகவிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக வெளியேற்றப்பட்டதால் தான் எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். அது ஒரு கசப்பான அனுபவமாகவே எம். ஜி. ஆருக்கு இருந்தது.
எனவே அவர் எப்போதும் கட்சி முடிவுகளை அடிப்படைத் தொண்டர்கள் மூலமாகவே எடுக்க வேண்டும் என்பதை விரும்பினார் அதன் அடிப்படையிலேயே கட்சி விதிகளையும் அவர் அமைத்தார்.
சில முக்கிய விதிமுறைகள் எப்பொழுதும் மாற்றி அமைக்க கூடாது என எம். ஜி. ஆர் விரும்பினார். ஆனால் அத்தகைய விதிமுறைகளை எல்லாம் அவசர கதியில் எடப்பாடி தரப்பினர் மாற்றியுள்ளனர்.
அதிமுக வின் அடிப்படை நோக்கமே மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. திடீரென ஒருவர் மைக்கின் முன்பாக வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது என சொல்லிவிட்டு அதனை பொதுக்குழு ஒட்டு மொத்தமாக ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கிறார்கள்.

இவை அனைத்தும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்பட்டது இது அதிகார துஷ்பிரயோகம். இன்று தேர்தல் நடைபெறுகிறது என்றாலும் கூட ஓபிஎஸ் தான் வெற்றி பெற்று இவர்கள் கேட்கக்கூடிய ஒற்றை தலைமையில் அமர்வார்.
அதிமுக வின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தான் இருக்கிறது. ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும், பதவி வெறிக்காகவும் கட்சி பலியாக பார்க்கிறது.
அதிமுக வின் பொருளாளராக இருப்பவர், கட்சியின் மிக மூத்த தலைவர். கட்சிக்கு பலமுறை நெருக்கடி ஏற்பட்டபோது முன்னின்று அதனை சமாளித்தவர்.
கட்சியின் தலைமை இவருக்கு மூன்று முறை முதல்வர் பதவியை கொடுத்த போதும் விசுவாசத்துடன் நடந்து கொண்டு தலைமையின் நன்மதிப்பை பெற்றவர்.
ஆனால் அத்தகைய ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட நீக்கி இருக்கிறார்கள்.
தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில் பல முக்கியமான அம்சங்களை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு கணக்கில் கொள்ளாமலேயே விட்டுவிட்டது” என்று வாதிடப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள் வரும் செவ்வாய்க்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
கலை.ரா
சென்னையில் ஜல்லிக்கட்டு : கமல் திட்டம்!
புதுக்கோட்டை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்?-சீமான்