govt transport union workers' strike case

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த வழக்கு ஒத்திவைப்பு!

தமிழகம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரிய வழக்கு நாளைக்கு (ஜனவரி 10) மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.

ஊதிய உயர்வு, பணி நியமனம் உள்ளிட்ட  6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அண்ணா, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ’தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை ஜனவரி 9 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டம் சட்ட விரோதமானது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்.

அதுமட்டுமல்லாமல் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் முறையிட்டிருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மனுதாரரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன், “போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முறையிட ஜனநாயக முறையில் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு வழிகள் உள்ளன.

ஆனால் வேலைநிறுத்தம் செய்வதற்கு சட்டப்பூர்வ அல்லது சட்டரீதியான உரிமை இல்லை. எனவே போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ”போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடைகோரும் இதே போன்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. எனவே இந்த வழக்கை நாளை ஒத்திவைக்குமாறு முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அமர்வு வழக்கை நாளைக்கு (ஜனவரி 10)  ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

லால் சலாம் படத்தின் புது ரிலீஸ் தேதி வெளியானது!

சிறுபான்மையினர் நலன்… முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *