கும்பகோணம் சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரியார் திருமண சர்ச்சை காரணமாக மடத்தை விட்டு வெளியேறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே சூரியனார் கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 18 சைவ மடங்களில் ஒன்று.
சூரியனார் கோயில் மடத்தில் இல்லறத்தைக் கைவிட்டு துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆதீனங்களாக இருந்து வருகின்றனர். இதை ‘சிவாச்சாரியார்கள் மடம்’ எனவும் கூறுகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு இந்த கோயில் மடத்தின் ஆதினமாக இருந்த சங்கரலிங்க தேசிய சுவாமிகள் பரிபூரணம் அடைந்ததால் 28ஆவது ஆதினமாக மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள் நியமிக்கப்பட்டார்.
இவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை கடந்த அக்டோபர் 10ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இந்த பதிவுச் சான்றிதழ் இணையத்தில் வைரலானது.
கர்நாடகாவில் சிவாக்கிர யோகிகள் மடம் தொடங்குவதற்காக ஹேமாஸ்ரீ இடம் கொடுத்ததாக தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் துறவறம் மேற்கொண்டு ஆதீனமாக இருக்கும் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என ஆன்மீகவாதிகள் மத்தியில் சர்ச்சை எழுந்தது.
ஆதீன மடத்தின் 1500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க மகாலிங்க சுவாமிகளும், ஹேமாஸ்ரீயும் முயற்சி செய்வதாக சூரியனார் கோயில் ஆதீனத்தின் உதவியாளர் சுவாமிநாத சுவாமிகள் சர்ச்சையை கிளப்பினார்.
இந்தநிலையில் மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள், தான் திருமணம் செய்துகொண்டது குறித்து அறநிலையத் துறைக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும், அறநிலையத்துறை என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன் என்றும் வீடியோ வாயிலாக கூறியிருந்தார்.
ஆதினம் திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூரியனார் கோயில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களில் ஒருபகுதியினர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் அவரே ஆதின மடத்தை நடத்தட்டும் என்று கூறினர்
இந்தநிலையில் இரு தரப்பும் சண்டை போடவேண்டாம் என்று தெரிவித்து மடத்தை விட்டு வெளியே சென்று அமர்ந்தார் மகாலிங்க பரமாச்சாரியார்.
அதோடு ஆதீன மடத்தை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கக்கோரியும் அவர் கடிதம் கொடுத்துள்ளார்.
அவர் வெளியே சென்றதையடுத்து, எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள், மடத்தின் கேட்டை மூடி பூட்டு போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை!
2 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் சூர்யா… காத்திருக்கும் ரசிகர்கள்!