டிஐஜி விஜயகுமார் மரணம்: கூடுதல் டிஜிபி அருண் கூறும் காரணம்!

Published On:

| By Selvam

டிஐஜி விஜயகுமார் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூராய்வு நடைபெற்றது.

பின்னர் அவரது உடலுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட எஸ்.பி-க்கள் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகுமார் உடல் அடக்கம் செய்வதற்காக அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படுகிறது.

டிஐஜி விஜயகுமாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண்,

“கோவை சரக காவல் துணை தலைவர் விஜயகுமார் இன்று காலை மரணமடைந்தார். அவர் 2009 ஐபிஎஸ் பேட்சை சார்ந்தவர். ஐபிஎஸ் சேர்வதற்கு முன்பாக 2003-ஆம் ஆண்டு டிஎஸ்பியாக 6 வருடங்கள் பணிபுரிந்து பின்னர் யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார்.

திறமையான அதிகாரி. அர்ப்பணிப்போடு காவல்துறையில் பணிபுரிந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

இன்று காலை அவர் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த சில வருடங்களாக அவர் மன அழுத்ததில் இருந்துள்ளார். அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவரிடம் பேசுகையில், விஜயகுமாருக்கு ஒசிடி கம் டிப்ரஷன் இருந்ததாக தெரிவித்தார்.

நான்கு நாட்களுக்கு முன்னதாக மருத்துவரிடம் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதற்கான மருந்துகளை மருத்துவர் கொடுத்துள்ளார்.

விஜயகுமாருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்ததால் மனைவியும் மகளும் சென்னையில் இருந்து வந்து கடந்த சில நாட்களாக அவருடன் இருந்துள்ளனர். டிஐஜி மரணத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு மன உளைச்சலை போக்குவதற்காக கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. நான் விசாரித்த வரையில் குடும்ப சூழல், பணி சுமை காரணமாக அவர் தற்கொலை செய்யவில்லை. மருத்துவ காரணங்களால் அவர் தற்கொலை செய்திருக்கலாம். மன அழுத்தம் குறித்து காவல்துறையிடம் அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று அருண் தெரிவித்தார்.

செல்வம்

டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் சாமிநாதன் அஞ்சலி!

டிஐஜி விஜயகுமார் தற்கொலை: முதல்வர் இரங்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment