நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை : முதல்வர் உத்தரவு!

தமிழகம்

நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 26) உத்தரவிட்டுள்ளார்.

காரீப் 2024-25 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 26) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கடந்த 2023-2024 காரீப் கொள்முதல் பருவத்தில் 25.06.2024 வரையில் 3,175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,72,310 விவசாயிகளிடமிருந்து 29,91,954 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.6,442.80 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது ஆகிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த கூட்டம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “காரீப் கொள்முதல் 2024-2025 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த ஆண்டு 12.06.2024 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்றிய அரசு அண்மையில் காரீப் 2024-2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300/-என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.320/- என்றும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு (Kharif Marketing Season) சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கிடவும்,

அதன்படி விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.405/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450/- என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை 01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்துவரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஆயில் என்ற பெயரில் மெத்தனால்: காட்டிக் கொடுத்த ஜிஎஸ்டி நம்பர்! -தொடரும் கள்ளக்குறிச்சி விசாரணை!

நாடாளுமன்றத்தில் பி.எச்.டி முடித்த இரண்டே தலித் எம்.பி-க்கள்; இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *