தமிழகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன.
ஆனால் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி பழுதாகி வேலை செய்யவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விளக்கமளித்தனர்.
சிசிடிவி பழுதாவது தொடர்பாக தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “ஸ்ட்ராங் ரூமில் இதுபோன்று பழுது ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்
சிசிடிவி அடுத்தடுத்து பழுதாவது வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது. வாக்காளர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், இப்பிரச்னையை நிபுணர் குழு மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (மே 8) நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சார்பில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அனைத்து ஸ்ட்ராங் ரூம்களுக்கும் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்த அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “கூடுதல் சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை அரசியல் கட்சி முகவர்கள் பார்ப்பதற்கு பிரத்யேக லைன், சுவிட்ச், ரவுட்டர் மற்றும் தொலைக்காட்சி ஆகியவை இருக்கும்” என்று கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கெஜ்ரிவாலுக்கு பெயில் கிடைக்குமா? இடைக்கால உத்தரவு எப்போது?
“சுருக்கமான திங்கள்”: சிஎஸ்ஐஆர் புதிய அறிவிப்பு!