ராகிங் தொடர்பாக ஏற்கனவே 7 மாணவர்கள் சஸ்பெண்ட் ஆன நிலையில் மேலும் 3 மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக வேலூர் சிஎம்சி நிர்வாகம் இன்று (நவம்பர் 29) உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பிரபலமாக உள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கியிருந்து மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவியரின் வசதிக்காக விடுதியும் உள்ளது.
இந்த நிலையில், விடுதியில் இந்த ஆண்டு சேர்ந்த முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் தொடர்பான விவகாரம் சர்ச்சையாகவே சி.எம்.சி நிர்வாகம் விசாரணை நடத்தி 7 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
வழக்கை முன்வந்து எடுத்த உயர்நீதிமன்றம்
இதனையடுத்து கடந்த 15ம் தேதி இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதிகிருஷ்ணகுமார் அமர்வு, விசாரணையை முன்னெடுத்தனர்.
அப்போது சிஎம்சி கல்லூரி நிர்வாகத்தின் மீது சரமாரி கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், அடுத்த 2 வாரத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறையினருக்கும் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டனர்.
விடுதி வார்டன் மீது குற்ற குறிப்பாணை
அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎம்சி ராகிங் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிஎம்சி மருத்துவக்கல்லூரி சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ராகிங் தொடர்பாக ஏற்கனவே 7 மாணவர்கள் சஸ்பெண்ட் ஆன நிலையில் மேலும் 3 மாணவர்களை கண்டறிந்து இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், ”ராகிங் தொடர்பாக புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதி மற்றும் நூலகங்களில் 24 மணி நேரமும் கூடுதல் சிசிடி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.
ராகிங் நடைபெற்றதை தொடர்ந்து விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் ஆண்டு மாணவர்கள் தங்களது புகார்களை நியமிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என சிஎம்சி நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு வழக்கை முடித்து வைத்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
”இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கை மாறும்!” : இலங்கை எம்.பி
விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பிப்பது எப்படி?