நடிகை கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி சென்னை எழும்பூரில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு தெலுங்கர்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் மீது சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் அமைத்த தனிப்படை போலீசார் கடந்த நவம்பர் 16ஆம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து சென்னை அழைத்துவரப்பட்ட கஸ்தூரி நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே அவர் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 18ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தான் சிங்கிள் மதர் என்றும் தனக்கு ஸ்பெஷல் சைல்டு இருப்பதாகவும், அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தயாளன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனிதாபிமானம் அடிப்படையில் ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை என காவல்துறை சார்பில் கூறப்பட்டது. கஸ்தூரி தரப்பு வழக்கறிஞரும் கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாலையில் தீர்ப்பு வழங்குவதாக கூறி ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று மாலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிக்கு எழும்பூர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக… நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனைவி கோரிக்கை!
கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு?: அமைச்சர் ரகுபதி பேட்டி!