“தெலுங்கு மக்கள் குறித்து நான் இழிவாக பேசியதாக திமுகவைச் சேர்ந்தவர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்” என்று நடிகை கஸ்தூரி இன்று (நவம்பர் 4) தெரிவித்துள்ளார்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று (நவம்பர் 3) இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “300 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜாக்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள். அவர்கள் இன்றைக்கு தங்களை தமிழர்கள் என்கிறார்கள். எப்போதோ இங்கு வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? ” என்று பேசியிருந்தார்.
கஸ்தூரியின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தது. தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில், தான் தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசவில்லை என்று கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரி, “தெலுங்கு மக்கள் குறித்து நான் இழிவாக பேசியதாக திமுகவைச் சேர்ந்தவர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெருவாரியான தெலுங்கு பேசும் மக்கள் வசித்து வருகிறார்கள். என்னுடைய புகுந்த வீடு தெலுங்கு தான். என்னுடைய குழந்தைகள் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளையும் கற்று வருகிறார்கள். நான் தமிழச்சி.
ஆனால், இன வாதத்தை நான் பேசவில்லை. பிராமண சமுதாய மக்களை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் முதலில் தமிழர்களா என்ற கேள்வியைத் தான் நான் முன்வைத்தேன். தமிழகத்தில் ஒருவரின் ஆதி வேரைப் பற்றி பேசியவுடன் கொந்தளிக்கிறார்கள். இவர்கள் இத்தனை நாட்கள் பிராமண சமுதாயத்தையும், வட மாநிலத்தில் இருந்து இங்கு பிழைப்புத் தேடி வந்தவர்களையும் மிகவும் நக்கலாக பேசினார்கள். ஆனால், அதை மிகப்பெரிய புரட்சியாக பார்த்தவர்கள், நான் அவர்களைப் பற்றி பேசியதை பொய்யாக சித்தரிக்கிறார்கள். இந்த பொய்க்கு பயப்படுகிற ஆள் நான் கிடையாது.
இவர்கள் ஆளும் கட்சியாவதற்கு முன்பு வரை தனிப்பட்ட தாக்குதலை என்னால் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால், தற்போது ஆளும் கட்சியான பிறகு தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறார்கள். கஸ்தூரி குடிகாரி, ஓசி குடிகாரி என்று பொய் பரப்புகிறார்கள். எனக்கு மது அருந்தும் பழக்கம் அறவே கிடையாது” என்று தெரிவித்தார்.
இந்த பிரஸ் மீட்டின் போது, 300 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாக்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று தான் பேசவில்லை என்று செய்தியாளரிடம் கஸ்தூரி வாக்குவாதம் செய்தார். அப்போது செய்தியாளர் கஸ்தூரி பேசிய வீடியோவை அவரிடம் காண்பித்தார். இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
தமிழக அரசு பணிக்கு இந்தி அவசியமா? – சீமான் எச்சரிக்கை… கீதா ஜீவன் விளக்கம்!!