கலைஞனாகத்தான் இங்கே வந்தேன் அரசியல் வாதியாக வரவில்லை என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வருட வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சியானது மதுரை மேனேந்தல் மைதானத்தில் இன்று (மார்ச் 19 ) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட, இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள், 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்கள், தத்ரூப காட்சி வடிவமைப்புகள் என குளிரூட்டப்பட்ட அரங்கில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். புகைப்பட கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நேரில் வந்து பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் வடிவேலு,” எனக்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது.
இங்கே பார்த்ததெல்லாம் படம் கிடையாது, நிஜம். தன்னம்பிக்கை, தைரியம், உழைப்பு எல்லாம் சேர்ந்துதான் இன்றைக்கு அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக்கியிருக்கிறது.
சிறையில் இவரை கொடுமைப்படுத்தியதைப் பார்க்கையில் படமும் கதை சொல்லும் என்பது போல் இந்த படங்கள் வரலாற்றைச் சொல்கிறது. இந்த புகைப்பட கண்காட்சியை அனைவரும் வந்து பார்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களுடனும் பழகி முதல்வர் ஸ்டாலின் அன்பைச் சம்பாதித்துள்ளதைப் பார்க்கையில் அருமையாக உள்ளது.
அவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும். ஒரு மனிதனின் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பதை இந்த புகைப்பட கண்காட்சியைப் பார்த்த தெரிந்து கொள்ளலாம்.
சிறையிலிருந்து உயிர்பிழைத்து வந்த உழைப்பாளி. பல தழும்புகளை வாங்கி பல கஷ்டங்களை வாங்கி உயர்ந்து வந்து இன்று முதல்வராக இருக்கிறார் என்றால் கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
மேலும் , “முதல்வர் ஸ்டாலினிடம் எனக்குப் பிடித்தது அவரது எளிமை தான். கொரோனா காலத்தில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்ததை மறக்க முடியாது” என்றார்.
அப்போது வடிவேலுவிடம், ”வரலாற்றை நகைச்சுவையாக எடுத்துச் சொல்லும் போது நன்றாக இருக்கும், உதயநிதி தவறவிட்டதை நீங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வேடத்தை எடுத்து அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா ? அதில் நீங்கள் நடிப்பீர்களா” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த வடிவேலு, “ இதில் நடிப்பதற்கு உதயநிதி ஸ்டாலினால் தான் முடியும் . வேறு யாராலும் முடியாது. அரசியல் பணி நிறைய இருப்பதால் அந்த படத்தை அப்படியே நிறுத்திவிட்டோம். கண்டிப்பாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த கதையில் அவரை நடிக்கச் சொல்லிக் கெஞ்சுவோம்” என்று கூறினார்.
மேலும், அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வடிவேலு பயப்படுவதற்கான காரணம் என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப…நகைச்சுவையுடன் “காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்” என்றார் வடிவேலு. இதனைத்தொடர்ந்து, “கலைஞனாகத்தான் இங்கே வந்தேன் அரசியல்வாதியாக வரவில்லை” என்று நடிகர் வடிவேலு கலகலப்புடன் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”ஸ்டாலின் முதல்வராக காரணமே நான் தான்” சீமான் அதிரடி!
எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!