“பள்ளிக்கு யாரை அழைக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச புரிதல் வேண்டும். இதை வேண்டுகோளாகவும் வைக்கிறேன், எச்சரிக்கையாகவும் சொல்கிறேன்” என்று சென்னை அசோக் நகர் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இன்று (செப்டம்பர் 6) மிகவும் கறாராக பேசியுள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் பரம்பொருள் அறக்கட்டளையின் மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியது பெரும் சர்ச்சையையும், சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியான நிலையில், பலரும் தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.
மகா விஷ்ணு பேசிக்கொண்டிருந்தபோது, தனது இருக்கையில் இருந்து எழுந்து குரல் எழுப்பிய ஆசிரியர் சங்கர், பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு நடத்தக்கூடாது என்றும் All are Equal என்றும் ஆக்ரோஷமாக பேசினார். அதற்கு ஆசிரியரை மிரட்டும் தொனியில் மகா விஷ்ணு பேசியிருந்தார்.
இந்த வீடியோ காட்சிகள் பெரும் சர்ச்சையான நிலையில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மகா விஷ்ணுவை எதிர்த்து கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரை பாராட்டினார்.
மேலும், “என் ஏரியாவில் வந்து மகாவிஷ்ணு பேசிவிட்டு போயிருக்கிறார். என் ஆசிரியரை அவமானப்படுத்திவிட்டு போயிருக்கிறார். அவரை அவ்வளவு சீக்கிரம் நான் சும்மா விடப்போவதில்லை” என்றும் எச்சரித்துள்ளார்.
மோட்டிவேஷன் என்ற பெயரில் மாணவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசி அவர்களை அழ வைப்பது இது முதல்முறையல்ல.
இதேபோல கடந்த ஆண்டு நடிகர் தாமு, மாணவர்கள் மத்தியில் நேர்மறை எண்ணத்தை உருவாக்குவதாக கூறி, அரசு பள்ளிகளில் தொடர்ந்து பேசி வந்தார்.
பள்ளி மாணவர்களிடம் அவர்களை படிக்க வைக்க பெற்றோர் படும் கஷ்டங்கள் குறித்தும் மாணவர்கள் செய்யும் தவறுகள் குறித்தும் பேசி வந்தார்.
அவரது பேச்சை கேட்ட மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வைரலானது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து பேசிய தாமு,
“மாணவர்களின் மனங்களில் தேவையற்ற எண்ணங்கள் இருக்கிறது. அவர்களின் மனதிற்கு தடுப்பூசி போல அன்பு என்னும் ஊசியை நான் செலுத்துகிறேன்.
அதனால் மாணவர்களுக்குள் இருக்கும் குழந்தை அழுகிறது. நான் பேசிய பின்பு அவர்களுக்குள் இருக்கும் குழந்தை புதிதாக பிறக்கிறது. குழந்தை பிறக்கும் போது அழுதுகொண்டே தான் பிறக்கும். அதேபோல மாணவர்களும் அழுகிறார்கள்” என்று புது விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்தநிலையில், நடிகர் தாமுவை அழைத்து நிகழ்ச்சியை நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் அறிவொளி விளக்கம் கேட்டார். மேலும், நடிகர் தாமுவை அழைத்து அரசு பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தாமு சலசலப்புகள் அடங்கிய சில மாதங்களில் மாணவர்களை மோட்டிவேஷன் என்ற பெயரில் குற்றவுணர்சிக்கு உள்ளாக்கி அழ வைத்திருக்கிறார் மகா விஷ்ணு.
மாணவர்களை அழ வைப்பது, அவர்களின் மனதில் மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்றும் அவர்களை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி அவர்களை அவர்களே வெறுக்க ஆரம்பிப்பார்கள் என்றும் உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று நிராகரிப்பு… இன்று வரவேற்பு!- கௌதம் அதானி வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யம்