பெற்றோர்கள் படும் கஷ்டத்தை பற்றி நடிகர் தாமு பேசிய போது அரங்கில் இருந்த பெண் காவலர் உட்பட அனைவரும் கண் கலங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தின் காரணமாக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை போதை பொருட்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் தடம்மாறி செல்லும் அவல நிலையும் ஏற்படுகிறது.
இதனால் ’போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற தலைப்பிலான நிகழ்ச்சி வில்லிவாக்கத்தில் உள்ள ஐசி.எப் அம்பேத்கர் மன்றத்தில் நேற்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 6 அரசு பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவர்களுடன் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாமு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாடினார்.
குறிப்பாக போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மிமிக்ரி மூலமாக சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் உரிய விளக்கங்களுடன் எடுத்துரைத்தார்.
தாய் தந்தையரே ஹீரோ எனவும் எங்களை போன்ற நடிகர்களின் கட் அவுட்களுக்கு பால் ஊற்றாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், உங்கள் வாழ்வு சிறக்க வழி ஏற்படுத்தி கொடுத்தது பெற்றோர்களும், பேராசிரியர்களும் தான் எனவும் நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடாமல் பேராசிரியர்களை கொண்டாடுங்கள் என்று பேசினார்.
பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளை பெற்றோர்கள் பாதுகாப்பது தொடர்பாகவும், மரியாதை தருவது தொடர்பாகவும் மாணவர்களிடையே தாமு உருக்கமாக பேசிய போது, அரங்கத்தில் இருந்த ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் கண் கலங்கினர்.
அதிலும் குறிப்பாக அங்கு பாதுகாப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுத நெகிழ்ச்சி சம்பவம் அரங்கத்தில் நடந்தது.
காக்கிக்குள்ளும் ஈரம் உள்ளது என்பது பெண் காவலர் அழுத காட்சிகள் மூலம் தெளிவானது.
அதே போல் அரும்பாக்கத்தில் நடந்த பள்ளி குழந்தையை மாடு முட்டிய சம்பவத்தை குறித்தும் குழந்தையை காப்பாற்றிய நபருக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் இரண்டு கையை மேலே உயர்த்தி கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாமு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு மட்டுமே அடிமையாவது இல்லை, செல்போன் போன்ற பல வகைகளில் அடிமையாகின்றனர்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு என்ற பெயரில் வாரத்தில் 3 நாட்கள் பள்ளிகளில் நடத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகஅவர் கூறினார்.
தொடரை வெல்லும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்: என்ன செய்யப்போகிறது இந்தியா?
”பொய் பேசும் நிர்மலா சீதாராமன்”- ஸ்டாலின் தாக்கு!
“தைரியமா இருங்க…” நாங்குநேரி மாணவனின் தாயுடன் ஸ்டாலின் செல்போன் பேச்சு!