சென்னையில் கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது சென்னை மாநகராட்சி.
இதுதொடர்பாக அது இன்று (அக்டோபர் 12) வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 26,242 கடைகளில் 2 குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
மீதமுள்ள கடைகளில் விரைந்து குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும்’ என கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதில், ‘கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும்.
நடைபாதை, சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் பொது இடங்களில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்த புகார்களை தெரிவிக்க மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர்,
ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்து 1913 மற்றும் 89255 22069 என்ற எண்களிலும் புகார் கூறலாம்.
என்விரோ நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர்,
மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்து 1913 மற்றும் 1800-833-5656 என்ற எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்’ என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பேஸ்புக்கில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை குறைந்தது… ஏன்?
டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மாயாஜால வீரர்கள்!