வெண்புள்ளி பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் உலக வெண்புள்ளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 26) விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களிடையே வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “வெண்புள்ளிகள் பற்றி விழிப்புணர்வு தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியா முழுவதும் பரவி உள்ளது.
உலகம் முழுவதும் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உலக மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் என்றால், இந்தியாவை பொறுத்த வரை 4 சதவீதமும், தமிழ்நாட்டை பொறுத்தவரை 37 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களை தனிமைப்படுத்துவதால் அவர்கள் மனதளவில் பாதிப்படைகின்றனர். 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தால், அது 37 லட்சம் நபர்கள் என்று குறிப்பிடுவதை விட 37 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
2025க்குள் காசநோய் இல்லாத தமிழகம், 2030க்குள் தொழுநோய் இல்லாத தமிழகம் என்கின்ற இலக்கை நோக்கி அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது.
கோவையில் வெண்குஷ்டம் என்று சித்த மருத்துவமனையில் பெயர் பலகை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் வெண்குஷ்டம் என்று பெயர் பலகைகள் இல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறோம். துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களும் வழங்க இருக்கிறோம்.
மேலும் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதோ வெறுக்கும் நிலையில் பார்க்கவோ வேண்டாம், அப்படி நடந்து கொண்டால் தமிழ்நாடு அரசு சார்பில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் எப்போது?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக எடப்பாடி வழக்கு!