ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் இன்று (அக்டோபர் 24) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “கடந்த ஆண்டுகளை போல கட்டண உயர்வு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முன்பதிவு குறைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
கிளாம்பாக்கத்தில் இருந்து மாலை நேரத்தில் பேருந்துகள் கிளம்பும் போது இடையூறு இல்லாமல் செல்வதற்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
சுங்கச்சாவடிகளில் பயண தாமதம் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். எனவே தீபாவளிக்கு செல்லும் போதும், மீண்டும் வரும்போதும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அதன் உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள்” என்றார்.
சாதாரண நாட்களில் ரூ800 வரை இருக்கும் டிக்கெட்டை பண்டிகை நாட்களில் மட்டும் ரூ.3000 வரை உயர்த்துவது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “ஆம்னி பேருந்துகளை தொடர்ந்து இயக்குகின்ற உரிமையாளர்கள் இந்த வேலையை செய்வது இல்லை. சில தனியார் செயலிகள், புதிதாக பேருந்துகள் வாங்குகிறவர்கள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சொகுசாக பயணிக்க வேண்டும் என்பதற்காக சிலர் கூடுதல் கட்டணம் போடுகின்றனர். அதனால் எல்லா ஆஃப்களையும் கவனித்துக்கொண்டே இருக்க முடியாது.
எல்லா பிரச்சினையும் சந்திக்கக் கூடிய துறையாக இந்த துறைஇருக்கிறது. எனவே எதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ… அந்த ஆஃப் குறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
எனினும் இன்று சென்னை முதல் சேலம் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளில் 600 முதல் 1100 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும் நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாட்களான 29,30 ஆகிய தேதிகளில் ரூ.1600 முதல் ரூ.3000 வரை டிக்கெட் விலை உள்ளது.
ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் 1800 4256 151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தமிழ் தலைவாஸ் அட்டகாச வெற்றி… புனே அணி மண்ணை கவ்வியது!
ஸ்லீப்பர் வந்தே பாரத்… இனி நீண்ட தூரப் பயணம் பற்றி கவலை வேண்டாம்!