கலாஷேத்ரா மீது நடவடிக்கை : மனித உரிமை ஆணையம் பரிந்துரை!
கலாஷேத்ரா நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும், டிஜிபியையும் மாநில மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார் எழுந்தது. கலாஷேத்ரா மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 11) கலாஷேத்ராவில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.
ஆணையத்தின் எஸ்பி மகேஷ்வரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, முதல்வர் பகல் ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? புகார் கொடுத்த மாணவிகளைக் கல்லூரி நிர்வாகம் மிரட்டியதா? விடுதியில் உள்ள மாணவிகளுக்காக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்று கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) கலாஷேத்ராவில் மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது.
இதனிடையே கலாஷேத்ரா நிர்வாகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பிரியா
ஜனநாயகம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுப்பதா? – கிரண் ரிஜிஜூ
அம்மாவுடன் சண்டை: 130 கிமீ சைக்கிளில் சென்ற சிறுவன்!