இசைக்கச்சேரியில் பங்கேற்காதவர்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்படும்: ஏசிடிசி நிறுவனர்
ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரியில் பணம் கொடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு முழு பணமும் திருப்பி செலுத்தப்படும் என்று ஏசிடிசி நிறுவனர் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலை அடுத்த பனையூரில் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் வெளியேறினர். இதனால் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு ஏசிடிசி நிறுவனம் தான் முழு பொறுப்பு என்று நிறுவனர் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் நிறைய அசெளகரியங்கள் நடந்திருக்கிறது. டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியை பார்க்க முடியாத ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் சந்தோஷமாக ரகுமான் சார் இசையை கேட்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோம்.
ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலர் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டதற்கு ஏசிடிசி முழுமையாக பொறுப்பேற்கிறோம். ரகுமான் சார் பெரிய லெஜண்ட். அவருடைய பங்கு இந்த நிகழ்ச்சியை எங்களுக்கு நடத்தி கொடுப்பது தான். அந்தவகையில் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி கொடுத்தார்.
சமீபமாக ஓரிரு நாட்கள் ரகுமான் சாரை தாக்கி நிறைய பேர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசெளகரியத்திற்கும் ரகுமான் சாருக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. தயவுசெய்து ரகுமான் சாரை மையப்படுத்தி சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட வேண்டாம். நிகழ்ச்சிக்கு பணம் கொடுத்து கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு முழு பணம் திரும்ப செலுத்தப்படும்” என்றார்.
செல்வம்
ஏ.ஆர். ரகுமான் கன்சர்ட்: செக்யூரிட்டிகள் நியமனத்தில் அலட்சியம்… ஆடியோ ஆதாரம்!
விநாயகர் ஊர்வலங்களால் என்ன பயன்?: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்