அவசர தேவை – நிலம் கையகப்படுத்தப்படுவது தவறு : உயர் நீதிமன்றம்!

Published On:

| By Kalai

அவசரகால தேவை என்ற பிரிவை பயன்படுத்தி குடியிருப்பு வாசிகளிடமிருந்து நிலத்தை பறிப்பது தவறு என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரில் உள்ள விமான பயிற்சி மையத்திற்கு தேவையான நிலங்களை அரசு ஏற்கனவே கையகப்படுத்தியது.  இதனால் அந்த விமான பயிற்சி மையத்திற்கு நிலங்களை கொடுத்தவர்கள் மாற்று நிலம் கேட்டனர்.

அவ்வாறு நிலம் கொடுத்தவர்களுக்கு நிலம் கொடுப்பதற்காக, அருகில்  குடியிருக்கும்  குடியிருப்பு வாசிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவசர உத்தரவு  ஒன்றை பிறப்பித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அவசர உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும்  தனி நீதிபதி நிஷா பானு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அவசரகால தேவை என்ற அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என்று குறிப்பிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் சுந்தர், ஸ்ரீமதி அமர்வு விசாரித்து வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், ‘மேல்முறையீட்டு வழக்கானது, மாவட்ட ஆட்சியர்  எமர்ஜென்சி கிளாஸ் அதாவது அவசரகால நிமித்தம் என்ற அடிப்படையில் நிலம் கையகப்படுத்த போட்ட உத்தரவு செல்லாது.

அதுபோல விமான பயிற்சி மையத்திற்கு, நிலம் கொடுத்தவர்களுக்கு,  மாற்று இடம் கொடுப்பதற்காக,  முறைப்படி வசித்து வரும் மற்றொரு குடியிருப்புவாசிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவது ஏற்புடையது அல்ல’ என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் இன்று (செப்டம்பர் 23) தீர்ப்பு வழங்கினர்.  

அதில் தஞ்சாவூரில் விமான படை பயிற்சி மையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு, மாற்று இடம் கொடுக்க, அவசரகால தேவை என்ற அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு.

அவசரகால தேவை என்ற பிரிவை பயன்படுத்தி, உரிய முறைமுறைப்படி அங்கு  குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகளிடமிருந்து, நிலத்தை பறிப்பது தவறு  என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

கலை.ரா

ட்விட்டருக்கு படையெடுத்த இன்ஸ்டாகிராம் பயனர்கள்!

என்ஐஏ சோதனை – பிஎஃப்ஐ ஸ்டிரைக் : அரசு பேருந்துகள் மீது தாக்குதல்!