காவல் துறையில், சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்த அதிகாரிகளுக்கு மத்திய அரசு பதக்கமும், பொதுச்சேவையில் சிறந்து விளங்கிய காவல்துறையினருக்குத் தமிழக முதல்வர் கையால் விருதும் சுதந்திர தினவிழா அன்று வழங்கப்படுவது வழக்கம்.
இந்த வகையில்ஆகஸ்ட் 15 இந்தியா 76 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது, சுதந்திர தின விழாவில் 2022ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம், காவல் துறையில் திறம்படப் புலனாய்வுகள் செய்த உதவி ஆய்வாளர்கள் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரையில் நாடு முழுவதும் 151 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவித்துள்ளது மத்திய அரசு.
அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் நான்கு பெண் அதிகாரிகள் ஒரு ஆண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிகாரிகள் எந்தெந்த வழக்குக்காக விருது பெற்றனர் என்பதை அறிந்தால் அவர்கள் மீதான மதிப்பு கூடும்.
டி.எஸ்.பி. கனகேஸ்வரி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டம், நகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காவேரிப்பாக்கம் சுப்புராயன் வீதியில் வசித்துவந்த ராஜி, மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கௌதம் மூவரும் 2019 ஆம் ஆண்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏசி வெடித்து இறந்துவிட்டனர் என்று செய்தி வந்தது.
இது தொடர்பாக 174 (சந்தேக மரணம்) என 2019ஆம் ஆண்டில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
ஏசி வெடித்த விபத்தாகவே இந்த வழக்கை முடிக்க முயற்சி செய்தனர் இன்ஸ்பெக்டர் ஒருவரும், அவருக்கு ஆதரவாக இருந்த அதிமுக பிரமுகர் ஒருவரும்.
அப்போது திண்டிவனம் கோட்டம் டிஎஸ்பி,யாக பணிசெய்துவந்த 2013 பேட்ஜ் டிஎஸ்பி கனகேஸ்வரி சிறந்த முறையில் புலனாய்வு செய்து அது ஏசி வெடித்த மரணம் அல்ல. சொத்துக்காக நடந்த கொலை என்பதை கண்டுபிடித்தார்.
இறந்துபோன ராஜி, கலைச்செல்வி தம்பதியின் மூத்த மகன் கோவர்த்தனன் தனது மனைவி தீபா காயத்திரியுடன் சேர்ந்து சொத்துக்கு ஆசைப்பட்டு, தந்தை ராஜி- தாய் கலைச்செல்வி, தம்பி கௌதம் மூவரும் வீட்டில் உறங்கும் நேரத்தில் தீ வைத்து எரித்துள்ளார்.
அப்போது அவரது தந்தை தப்பிக்க வெளியில் வந்தபோது கத்தியால் வெட்டி கொலை செய்ததை, தனது புலனாய்வில் கண்டுபிடித்து கடுமையான தண்டனைப் பெற்றுக் கொடுத்தவர்தான் டிஎஸ்பி கனகேஸ்வரி.
இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி
திருநெல்வேலி சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி, சுத்துப்பட்டு நான்கு மாவட்டங்களுக்கு பொறுப்பு இன்ஸ்பெக்டராக இருந்துவருகிறார்.
2021இல் பாஜக பிரமுகர் முத்தாரம் என்பவரைக் கொலை செய்ய நடந்த தாக்குதல் வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அப்போது சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி, குற்றவாளி மாஹிம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கண்டுபிடித்து மதக் கலவரத்தைத் தடுத்துள்ளார், அடுத்ததாக அஜித் முகமது கொலையில் பக்ரத் அலி ஆதரவாளர்களைக் கண்டுபிடித்து வழக்கை நடத்தி வருபவர்தான் பாண்டி முத்துலட்சுமி.
இதுபோன்று சிறப்பாகப் புலனாய்வு செய்தவர்களின் பட்டியலைத் தமிழக அரசு பரிந்துரை செய்தது.
அதில் ஐபி அதிகாரிகளின் ரிப்போர்ட்களை வைத்துக் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் கே.அமுதா, எஸ்.சசிகலா, பாண்டி முத்துலட்சுமி, உதவி ஆய்வாளர் ஆர்.செல்வராஜன் ஆகிய ஐந்துபேர் மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கத்தை பெறவிருக்கிறார்கள்.
அதேபோல் தமிழகக் காவல்துறையில் பொதுச்சேவையில் சிறந்து விளங்கிய சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா ஐபிஎஸ்,
கடலூர் எஸ்.பி.சி.ஐ.டி, இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர், சென்னை அடையார் ட்ராபிக் எஸ்.எஸ்.ஐ சிவராமன், மதுரை மதிச்சியம் காவல் நிலைய ட்ராபிக் எஸ்.எஸ்.ஐ பழனியாண்டி, தாம்பரம் செம்மஞ்சேரி ட்ராபிக் எஸ்.எஸ்.ஐ எம்.குமார் ஆகிய ஐந்து பேர்களைத் தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் கையால் விருது வழங்குகிறார்.
–வணங்காமுடி
ஆகஸ்ட் 15: ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் சென்னை