திருவண்ணாமலை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் விபத்துக்களால் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாக மாய்ந்து வருகிறது என்கிறார்கள் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
நேற்று அக்டோபர் 23 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கருமாங்குளம் பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்… பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை மார்க்கமாக வந்த அரசு பேருந்தும் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் மார்க்கமாக சென்ற டாடா சுமோ காரும் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பலியானார்கள். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றபோது இருவர் இறந்துவிட்டனர். மொத்தம் ஏழு பேர் இறந்துபோனார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் கௌமங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 11 பேர் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு புதுச்சேரி சென்று சந்தோஷமாக இருந்துவிட்டு மாலை 5 மணிக்கு புறப்பட்டுள்ளனர்,
கௌமங்கலம் பகுதியைச் சேர்ந்த புனித்குமார் காரை ஓட்டியுள்ளார், மேல்செங்கம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கருமாங்குளம் பகுதியில் பெங்களூரிலிருந்து வந்த அரசு பேருந்தும், டாடா சுமோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே நாளில் செங்கம் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட கொட்டாக்குளம் பகுதியில் கணவன் மனைவி பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்து விட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
எட்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 15 ஆம் தேதி இரவு பெங்களூர் சேர்ந்த சதீஷ்குமார், மனைவி காவ்யா, இரண்டு மகன்கள், மாமனார், மாமியார், இரண்டு மைத்துனர்கள் ஆகிய எட்டு பேர் குடும்பத்துடன் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று காரில் திரும்பினர். அதே மேல்செங்கம் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பக்கிரிப்பாளையம் அருகில் பெங்களூரிலிருந்து வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் வந்த ஏழுபேர் இறந்து போனார்கள்,
இதேபோல் கடந்த 23 நாட்களில் நடந்த விபத்துகளில் 20 பேர் இறந்துள்ளனர் என்கிறார்கள் செங்கம் பகுதி மக்கள்.
விபத்துக்கான காரணங்களைப் பற்றி விசாரித்தோம்.
“பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் குடித்துவிட்டு ஓட்டுகிறார்கள். அடுத்தது இரவு பயணம் ஓய்வு இல்லாமல் தூக்கத்தில் டிரைவிங் செய்வது, ஐந்து பேர் செல்லக்கூடிய வாகனத்தில் ஏழு பேர் வரை செல்வது, ஏழு பேர் செல்லக்கூடிய வாகனத்தில் எட்டு முதல் 11 பேர் பயணிப்பது இதுபோன்று ஓவர்லோடு ஏற்றுவதால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பிரேக் நிற்காமல் விபத்துக்குள்ளாகிறது.
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய போக்குவரத்து துறை அதிகாரிகளும் போக்குவரத்துத் துறை போலீஸாரும் கவனிக்காமல் விட்டதன் விளைவுகள்தான் இப்படி தொடர் விபத்துக்கு காரணம் என்கிறார்கள் செங்கம் பகுதி வணிகர்கள்.
–வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பார்த்திபன் – டி.இமான் கூட்டணியில் புதிய படம்!