ராமநாதபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கார் விபத்தில் சிக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் என்ற இடத்தில் கார் ஒன்று சாலை ஓரத்தில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் கிடந்த காரை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து மதுராந்தகம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்தவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. ஒருவரைப் படுகாயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த கார் ராமநாதபுரத்திலிருந்து வந்ததும், உயிரிழந்த மூன்று பேரும் ஆண்கள் என்பது தெரியவந்தது.
எனினும் அவர்கள் யார் யார் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இன்று அதிகாலையில் கார் விபத்துக்குள்ளான நிலையில், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் அதிவேகமாக கார் ஓட்டியதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
4 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று தென்மாவட்டங்களிலிருந்து பலரும் சென்னை திரும்பிய நிலையில், இந்த விபத்து காரணமாகத் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்து, விபத்து குறித்தும், உயிரிழந்தவர்கள் தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
பிரியா
ஆடி அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்!
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு காவல் துறையில் பணி!