புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று டீ குடித்துக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு 22 ஐயப்ப பக்தர்கள் வேனில் சென்றுள்ளனர். திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் என்ற ஊரில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்தியுள்ளனர்.
நமணசமுத்திரம் காவல் நிலையம் எதிரே உள்ள ஐயங்கார் டீ கடையில் ஐயப்ப பக்தர்கள் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக லாரி ஒன்று வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை சேர்ந்த மணிகண்டன் என்பவர் லாரியை ஓட்டிவந்துள்ளார்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் நிறுத்தியிருந்த வேன் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் வேன் அருகில் நின்றுகொண்டு டீ குடித்துக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் ஜெகநாதன், சுரேஷ், சதீஷ், சாந்தி, கோகுலகிருஷ்ணன் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஐயப்ப பக்தர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான நமணசமுத்திரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!
கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைப்பதா? – வேல்முருகன் கண்டனம்!