கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இரண்டு படகுகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக குளிர்சாதன வசதி படகு போக்குவரத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

விவேகானந்தர் சிலைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இந்த படகின் மூலம் சென்று வரலாம். இதுவரை பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய படகுகள் இயக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய படகு போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டுள்ளது.

குமரி படகு துறையிலிருந்து வட்டகோட்டை வரை படகு போக்குவரத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “ஆசிய வங்கி உதவியோடு 8.25 கோடி ரூபாய் மதிப்பில் படகுகள் வாங்கப்பட்டது. இந்த படகுகளுக்கு தாமிரபரணி, கன்னியாகுமரி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுதவிர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் சிலைக்கும் இடையே கண்ணாடியிழை பாலம் அமைக்கப்படும். 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்ட பாலம் இது. இந்த பாலத்தின் திட்ட மதிப்பீடு 37 கோடி ரூபாய். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பாலம் கட்டி முடிக்கப்படும். இன்னும் ஒரு ஆண்டில் இந்த பாலம் திறந்து வைக்கப்படும்” என்றார்.
இன்று தொடங்கி வைக்கப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.450ம், சாதாரண படகில் பயணம் செய்ய ரூ.350ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரியா
பதிரானாவுக்காக போட்டியை நிறுத்திய தோனி: பைனலில் விளையாட தடையா?