மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டினை தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கியது.
இந்த போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டுத் துறை மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்
ஜல்லிக்கட்டின் தொடக்கமாக முதலில் முனியாண்டி சாமி காளை அவிழ்க்கப்பட்டது. பாரம்பரிய வழக்கப்படி அதனை யாரும் பிடிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சுற்றில் காளையை அடக்கிய சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணன் என்பவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் காளையை அடக்கிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்ற சுற்றுகளில், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் சூரி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றவர்களின் காளைகள் உட்பட மாலை 5 மணிவரை 10 சுற்றுகள் முடிவில் மொத்தம் 823 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
சீறும் காளைகளையும், துடிக்கும் காளையர்களையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுடன், அமைச்சர்கள், உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
இறுதியில் காயம் ஏற்பட்ட போதும், வெற்றி பெற வேண்டும் என்ற தீரா வேட்கையுடன் களத்தில் 26 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியைச் சேர்ந்த அபி சித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார்.
அவரைத் தொடர்ந்து 20 காளைகளை அடக்கிய ஏனாதியைச் சேர்ந்த அஜய் என்பவர் 2ஆம் இடத்தையும், 12 காளைகள் அடக்கிய அலங்கையைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் 3ஆம் இடத்தையும் பிடித்தனர்.
இதனையடுத்து முதலிடம் பெற்ற அபி சித்தருக்கு பரிசாக தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு வென்ற அஜய்க்கு பரிசாக அமைச்சர் உதயநிதி சார்பில் டூவீலர் வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த மாடுகள் பட்டியலில், முதலிடத்தை புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழன் மாடு பிடித்தது. இரண்டாவது இடத்தை புதுக்கோட்டை எம்.எஸ்.சுரேஷ் மாடும், 3வது இடத்தை உசிலம்பட்டி வெள்ளம்பழம்பட்டி பட்டானி ராஜா மாடும் பிடித்தன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் போலீசார் தக்க பாதுகாப்பு அளித்த நிலையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
அதேவேளையில் மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், காவலர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 50 பேர் காயமடைந்தனர். அதில் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.1000 கோடியை நோக்கி டாஸ்மாக் வசூல்! – ராமதாஸ் வேதனை
ஜே.பி நட்டா பதவி காலம் நீட்டிப்பு!