ஆவினில் கெட்டுப்போன அல்வா விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் குறிப்பாக நகரங்களில் வசிக்கக் கூடியவர்கள் ஆவின் பாலையே அதிகளவு வாங்குகின்றனர்.
பால் மட்டுமின்றி குல்ஃபி, பால்கோவா, அல்வா என பல வகையான இனிப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் அவ்வப்போது ஆவின் பாலில் ஈ, பால் அளவு குறைவு ஆகிய குற்றசாட்டுகள் எழுவதும் அதற்கு நிர்வாகம் சார்பில் பதிலளிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
தற்போது ஆவினில் விற்பனை செய்யப்பட்ட அல்வா கெட்டுப்போயிருந்தது தெரியவந்துள்ளது.
தொழில் நேசன் மாத இதழ் ஆசிரியர் நேற்று (அக்டோபர் 18) இதுதொடர்பாக முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஆவின் மீதான நம்பிக்கையைத் தகர்த்து விடும்… இன்று மாலை எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ஆவின் பூத்தில் ரூ. 170/- கொடுத்து கருப்பட்டி அல்வா வாங்கி வந்தேன். வீட்டிற்கு வந்து பிரித்த போது அதிர்ந்து போனேன்.
காரணம் அல்வா நூறு சதவீதம் கெட்டுப் போய் இருந்தது. நல்ல வேளை பிள்ளைகள் யாரும் பிரிக்கவில்லை. அப்படிப் பிரித்திருந்தால்…ஆர்வம் மிகுதியால் சாப்பிட்டு இருந்தால் பிரச்சினையின் வடிவம் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.
ஒரு பொருளை உற்பத்தி செய்த காலம், அதை பயன்படுத்தும் காலம் இவற்றை அப்பொருளின் மீது அச்சிடுவது விதி.
ஆனால் இவற்றை எல்லாம் பார்த்து வாங்குபவர் எத்தனை பேர்? நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகப் பொருளைக் கண் மூடிக்கொண்டு வாங்குபவர்கள் பலர் உள்ளனர் என்பதை மறுக்க இயலாது.
நிறுவனத்தின் நம்பிக்கையைத் தகர்க்கும் செயல் போன்றது தான் இன்று எனக்கு ஆவின் பூத்தில் கிடைத்த அனுபவம்.
மேலும் ஆவின் பூத்தில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு பில் கொடுப்பதைக் கட்டாயம் ஆக்க வேண்டும்.
தயவுசெய்து இனி ஆவின் பூத்தில் வாங்கும் பொருட்களுக்குப் பில்லை கேட்டு வாங்கி விடுங்கள். இவர்கள் தயாரிக்கும் பொருட்களை கண்களை மூடிக்கொண்டு
சுவைப்பவர்கள் இனி தயவுசெய்து கவனமாக இருக்க வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஆவினில் 200 கோடி வரை வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பால்வளத் துறை அமைச்சர் நாசர் கூறியிருந்தார்.
அதுபோன்று மக்களும் தொடர்ந்து ஆவின் இனிப்புகளை வாங்கிய வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் கெட்டுப்போன அல்வா விற்பனை செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
கார்டனில் இருந்து சசியை வெளியேற்றிய ஜெ: கிருஷ்ணபிரியா வாக்குமூலம்!
`நான் மிருகமாய் மாற` கதை என்ன?: சசிக்குமார்