“ஆவின் பால் பாக்கெட்டில் அளவை குறைத்து மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது” என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் நீலம், பச்சை, ஆரஞ்சு ஆகிய 3 நிறங்களில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பால் பாக்கெட்டில் அளவு குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் ஜூலை 30ம் தேதி விற்பனைக்கு வந்த 500 மிலி பால் பாக்கெட்டில், 430 கிராம் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆவின் பால் பாக்கெட்டை பொறுத்தவரை, அதன் அளவை, கிராமில் கணக்கிடும்போது, 500 மிலி என்பது, 517 கிராம் இருக்க வேண்டும்.
இதில், பால் பாக்கெட் 2 கிராம் இருக்கும். எவ்வகையிலும் பாலின் எடை, 515 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், கடந்த இரு நாட்களாக விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்களில் 430 கிராம் மட்டுமே பால் இருந்துள்ளது. இதை கண்டறிந்த சென்னையை சேர்ந்த பால் முகவர் ஒருவர், ஆவின் அதிகாரிகளுக்கு சமூக வலைதளம் வாயிலாக தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிப்பதற்கும், துறையின் முக்கிய புள்ளி உள்ளிட்டோருக்கு வருவாய் கிடைக்கவும், இந்த நூதன செயலில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு ஆவின் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி, “ஆவினில் தண்ணீர் கலந்து மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றதுபோல் ஆவின் பால் பாக்கெட்டில் அளவை குறைத்து 515 கிராம் இருக்கவேண்டிய பால் பாக்கெட்டில் 430 கிராம் மட்டுமே அடைத்து மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்