தொடர் கனமழை பாதிப்பு காரணமாக சென்னை மாநகரில் இன்று (டிசம்பர் 6) அத்தியாவசிய தேவையான ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். aavin milk scarcity
சென்னையில் ஆவின் பாலை பொறுத்தவரை ஒருநாளுக்கு 14.75 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் பாதிப்பு ஏற்பட்டு பால்விநியோகம் தடைபட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பால்பண்ணைகளில் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,
“கனமழையால் மழைநீர் பண்ணைகளில் சூழ்ந்துள்ளதால் பால்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் சீராக கிடைக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலையிலும் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெருங்குடி, மேற்கு தாம்பரம் போன்ற பகுதிகளில் இன்னும் 3 அடிவரை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் மழைநீர் வடிந்துள்ள வியாசர்பாடி, எம்கேபி நகர்பகுதி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேப்பாக்கம், சூளைமேடு,செனாய்நகர், கோயம்பேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உட்பட பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆவின் பால் பூத்களில் இன்று காலையில் குறைந்த அளவே பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வந்தன. அதனால் மாதாந்திர அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே ஒரு பால் பாக்கெட் என்ற நிபந்தனையுடன் விற்கப்பட்டு வருகிறது. எனினும் அதையும் வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளை காண முடிகிறது.
ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆவினுடன் ஒப்பிடுகையில் ஒருவருக்கு 5 பால் பாக்கெட் என்று அவை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேவையை விட அதிகமாக பால் வாங்க வேண்டாம்!
இந்த நிலையில் இன்று காலையில் ஆவின் பால் விநியோகத்தை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் பால் தட்டுப்பாடு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலைமை நன்கு சீரடைந்து வருகிறது.
வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்; அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி பகுதிக்கு வழக்கமான விநியோகத்தை விட கூடுதலாக 10,000 லிட்டர் பால் அமைச்சர் எ.வ.வேலு ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.1000 குறைந்த தங்கம் விலை: காரணம் என்ன?
ராஷ்மிகா – தேவரகொண்டா போட்டோ… மன்னிப்பு கேட்ட நானி
ICC தரவரிசையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிய ருதுராஜ்
aavin milk scarcity