போலீஸ் பாதுகாப்புடன் ஆவின் பால் விற்பனை!

தமிழகம்

சென்னை கடற்கரை ஆவின் பாலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாகச் சென்னை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் குடிநீர், பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குறிப்பாகக் கடந்த இரு நாட்களாகப் பொதுமக்கள் ஆவின் பால் கிடைக்காமல் கடை கடையாக அலைவதை காணமுடிகிறது.

பால் பண்ணைகளில் மழை நீர் புகுந்ததால் பால் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.

இன்று காலை முதல் ஆவின் மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆவின் பூத்துகளில்  பால் வினியோகிக்கப்பட்டது. அதுவும் அனைவருக்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சென்னை கடற்கரை ரயில் நிலையம் எதிரே இருக்கும் ஆவின் பாலகத்தில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் கடற்கரை ரயில் நிலைய பாலகத்தில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

போலீஸ் பாதுகாப்புடன் பால் வினியோகிக்கப்பட்டு வருகிறது. சிலர் குழந்தைகளுடன் வந்து பால் வாங்க காத்திருப்பதையும் காண முடிகிறது. பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வந்து நெரிசலை ஏற்படுத்தி விடக் கூடாது என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவொற்றியூரில் இருந்தும் பால் வாங்க வந்து கடற்கரை ரயில் நிலைய ஆவின் பூத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். புரசைவாக்கம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் வந்துள்ளனர்.

“இரண்டு நாட்களாக பால் கிடைக்கவில்லை. இங்கு பால் விற்கிறார்கள் என்ற தகவல் கிடைத்து வந்துள்ளோம். குழந்தைகளுக்குப் பால் தேவைப்படுகிறது” என அவர்கள் நியூஸ் 18 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

பால் விற்பனை தொடர்பாக துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய தினம் நிலைமை நன்கு சீரடைந்து விட்டது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது. எனவே, பொதுமக்கள் பதட்ட மனநிலையில் அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவே, பால் தேவைப்படும் பிறருக்கும் பால் கிடைக்க வழிவகுக்கும்.

ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு உள்ளது. எனவே ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்குத் தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் பால் விநியோகம் சவாலாக இருப்பதால், அதைச் சீர்படுத்தத் தனியார் பால் நிறுவனங்களுடன் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ஹரிஷ் கல்யாண் நிதியுதவி!

வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்… இன்சூரன்ஸ் எளிதாக பெறுவது எப்படி?

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *