குளிர்சாதன வசதியின்றி 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும் பாலை ஆவின் நிறுவனம் இன்று (நவம்பர் 2) அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக கடைகளில் நாம் வாங்கும் பால் பாக்கெட்டை குளிர்சாதன உதவியுடன் அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பால் கெட்டுவிடும்.
இதனால் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்வோர், மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் பாலை நீண்டகாலத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடியவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படுவர். தொடர் மழையினால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையும் தடைபடும்.
இந்நிலையில் 90 நாட்கள் வரை குளிர்சாதன வசதியின்றி பயன்படுத்தக் கூடிய ’டிலைட்’ என்ற புதிய பசும்பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
3.5 % கொழுப்பு; 0% பாக்டீரியா!
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் கூறுகையில், ”3 மாதம் வரை வைத்து பயன்படுத்தக்கூடிய இந்த ’ஆவின் டிலைட்’ பொதுமக்களின் வசதிக்காக 500 மில்லி லிட்டர் பாக்கெட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் சில்லறை விலை ரூ.30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வித வேதிபொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் இந்த ஆவின் ‘டிலைட்’ என்ற பசும்பால் தயாரிக்கப்படுகிறது.
ஆவின் டிலைட்டில் 3.5 சதவிகிதக் கொழுப்பு இருக்கும். 0% பாக்டீரியா. வாங்கிய உடன் பாலை சூடாக்கிப் பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும் ஏற்றது” என்று தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பேருந்து பயணத்தில் பேரிடர்: இன்ஸ்பெக்டர் செய்த இமாலய உதவி!
கே.எல்.ராகுல் ஃபார்முக்கு வர கவாஸ்கர் சொல்லும் வழி!