ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு, அவை இன்று (செப்டம்பர் 14) முதல் அமலுக்கு வருவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஒரு லிட்டர் நெய் ரூ.630ல் இருந்து, ரூ.70 அதிகரித்து இன்று முதல் ரூ. 700ஆக உயர்ந்துள்ளது. ஐந்து லிட்டர் நெய், ரூ.3,250ல் இருந்து, ரூ.350 அதிகரித்து, ரூ.3,600 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே போன்று 100 மி.லி நெய் 10 ரூபாய் அதிகரித்து இரு வேறு பாட்டில்களுக்கு ஏற்ப 80 மற்றும் 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அரை லிட்டர் நெய் 310 ரூபாயில் இருந்து ரூ.50 அதிகரித்து ரூ.360க்கு விற்பனையாகிறது.
ஆவின் வெண்ணெய் விலையை பொறுத்தவரை சமையல் மற்றும் உப்பு வெண்ணெய் இன்று இரண்டு விதமாக விற்கப்படுகிறது.
அவை இரண்டிலும் ரூ.25 உயர்த்தப்பட்டு முறையே ரூ.275 மற்றும் ரூ.280 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நெய், வெண்ணெய் விலையும் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டுள்ளது நுகர்வோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் கடந்த ஓராண்டில் 5வது முறையாகவும், நடப்பாண்டில் இரண்டாவது முறையாகவும் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ENGvsNZ: அதிரடி கம்-பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்… இங்கிலாந்து அபார வெற்றி!
அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: 9 பேருக்கு பாதிப்பு… 2 பேர் பலி!