டாஸ்மாக் டார்கெட்டுக்கு போட்டியாக ஆவின் டார்கெட்!

தமிழகம்

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் அந்த பண்டிகைகளை ஒட்டி டாஸ்மாக் மதுபானம் எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனையானது என்ற செய்தி வெளியாகும். இந்த செய்தியைப் பார்த்து சமூக ஆர்வலர்கள் வேதனைப்பட்டதும் உண்டு.

இந்த வேதனைக்கு ஆறுதலாக இப்போது வேறொரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ. 200 கோடிக்கு ஆவின் இனிப்புகளை விற்க இலக்கு  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பாலில் ‘ஈ’ மிதக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தைகள், நோயாளிகள் என அனைவரும் நாள்தோறும் அருந்தக்கூடிய பால் இப்படி சுகாதாரமற்று இருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் சென்னை அம்பத்தூரில்  உள்ள ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று (செப்டம்பர் 22) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இனிப்புகள் சுத்தமாக தயாரிக்கப்படுகிறதா என பார்வையிட்டதுடன் இனிப்புகளை பேக் செய்யும் புதிய இயந்திரத்தின் இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.

மேலும் பணியாளர்களை சுத்தமாக  இனிப்புகளை தயாரிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கடந்த ஆண்டு ஆறு இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் இந்தாண்டு ஒன்பது வகையான ஆவின் பொருட்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதேபோல் கடந்த ஆண்டு ஆவின் பொருட்கள் 82 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனைபடைத்தது.

இந்தாண்டு தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள 4.5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் அரசு அதிகாரிகள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ் ஆவின் பொருட்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அம்பத்தூர் மட்டுமல்லாமல் திருவள்ளூர், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட,

அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் நிறுவன கிளைகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

சிறப்பு விற்பனைக்கு தொலைபேசி எண்கள் மூலம் புக்கிங் செய்தால் இலவச டோர் டெலிவரியும் செய்து தரப்படும்” என்று அமைச்சர் நாசர் செய்தியாளரிடம் கூறினார்.

டாஸ்மாக் டார்கெட்டுக்கு போட்டியாக ஆவின் டார்கெட் வைப்பது ஆறுதலான ஆரோக்கியமான விஷயம்தான்!

கலை.ரா

பாஜக தலைவர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது!

விரைவில் மதுரை வருகிறார் மோடி: நட்டா தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *