ஆவின் சார்பில் புதிதாக குளிர்பானங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இன்று (ஜனவரி 13) நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஆவின் நிறுவனம் சார்பில் ஏற்கனவே பல்வேறு வகையான இனிப்பு வகைகள் மற்றும் பால் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறன.
அதனடிப்படையில் வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஆவினில் கேக் அறிமுகம் செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தாண்டில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் 3,200 டன் அளவுக்கு இனிப்புகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆவினில் பணிபுரியும் 27,189 பணியாளர்களுக்கு ரூ.2.70 கோடி பொங்கல் போனஸாக வழங்கப்பட உள்ளது.
ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமல்லாமல் மோர், தயிர், லஸ்ஸி , இனிப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஆவின் சார்பில் கோடை காலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை கொண்டுவரவும், குளிர்பானங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவும் உள்ளது.
இதுதொடர்பான விளம்பரங்கள் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!