ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமிழகம் முழுவதும் பால் சொசைட்டி, ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
மேலும் ஆவினில் பல வகை மில்க் ஷேக்குகள், ஐஸ் க்ரீம்களும் விற்பனையாகின்றன. இது தவிர, புதிதாக 10 பால் உணவுப் பொருட்களும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீலநிற பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது. ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால், சில்லறை விலையில் 60 ரூபாய்க்கும், சிகப்பு பாக்கெட் பால் 76க்கும் விற்கப்படுகிறது.
அதேநேரத்தில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. 27 மண்டலங்களில் இணையதளம் மூலமாக இந்த பணி நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்