நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மீறியதால் ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்களின் முன் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 29) தள்ளுபடி செய்தது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகளை பரப்பியுள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
இதுதொடர்பாக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார்கள் சென்றதையடுத்து, இந்நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 60 பவுன் தங்கநகைகள், 48 கணினி ஹார்டு டிஸ்க், 6 லேப்டாப், 44 செல்போன், 2 கார், ரூ.3.41 கோடி கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதற்காக நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிறுவனத்தின் இயக்குநர்களான மோகன்பாபு மற்றும் பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆருத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள், 70 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நிர்வாக இயக்குநர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், வங்கி கணக்குகள் முடக்கத்தால் தான் பணத்தை திருப்பித்தர இயவில்லை என்றும், திருப்பித் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ”தொகையை டெபாசிட் செய்தவர்கள் அதனை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான அலுவலராக சென்னை மாவட்ட ஆட்சியரக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்படுகிறார். டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் மனுதாரர்கள் அனைவரும் இணைந்து 50 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் காவல்துறை தரப்பில், விண்ணப்பித்தவர்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக நிறுவன இயக்குனர்கள் காவல்துறை முன்பு ஆஜராகவில்லை எனவும் 50 கோடி ரூபாய் பணத்தையும் செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.
இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதில் முதற்கட்டமாக முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், அதன்பின்னர் 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு அடுத்தகட்டமாக முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
க. சீனிவாசன்