குளிர்காலம் நெருங்க நெருங்க நமது நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதனால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். குறிப்பாக தசைவலி, பிடிப்புகள் மற்றும் தோல் பிரச்சினைகள் உண்டாகும். இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு. இதில் கவனம் செலுத்தினால் உடல்நலம் சீராக இருக்கும்.
வேகவைத்த உருளைக்கிழங்கில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி அதிகம். அவல் எளிதில் ஜீரணமாகக் கூடியது. இந்த இரண்டும் சேர்ந்த இந்த ஆலு போஹா குளிருக்கு ஏற்ற சுகமான, சத்தான உணவாக அமையும். வட மாநிலங்களில் குளிர்காலங்களில் ரோட்டோரக் கடைகளில் விற்கப்படும் பிரபலமான உணவு இது.
என்ன தேவை?
வேகவைத்து சதுரங்களாக நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒரு கப்
கெட்டி அவல் – 2 கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எலுமிச்சை – ஒன்றில் பாதி (சாறு எடுக்கவும்)
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – கால் கப்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, உருளைக்கிழங்கை வறுத்து தனியே வைக்கவும். அவலை 15 நிமிடம் ஊறவைத்து, எடுத்துக்கொள்ளவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஊறவைத்த அவல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். இத்துடன், வறுத்த உருளைக்கிழங்கு, வேர்க்கடலை சேர்த்துக் கலக்கவும். மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி, எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு குலுக்கி சூடாகப் பரிமாறவும்.