திருச்சி ஏர்போர்ட் ரன்வே நீட்டிப்பு… மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு?

Published On:

| By Selvam

திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கப் பணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் ரூ.18.6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

புதிய விமான நிலையம் திறந்த பிறகும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய விமான ஓடுபாதையில் தான் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் பெரிய ரக விமானங்கள் திருச்சிக்கு இயக்கப்படவில்லை.

இந்தநிலையில், தற்போதுள்ள 8,136 அடி ஓடுபாதையானது 13,057 அடிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக நேற்று (ஜனவரி 26) திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் ஜி.கோபாலகிருஷ்ணன் பேசும்போது, ” திருச்சியில் ரன்வேயை நீட்டிக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பாதுகாக்கவும், விமான நிலைய விரிவாக்கத்தைத் தொடங்கவும் இந்திய விமான நிலைய ஆணையம் ரூ.18.6 கோடி ஒதுக்கியுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முடிந்ததும், ஓடுபாதை நீட்டிப்பு திட்டம் முழு வீச்சில் தொடங்கும். இது திருச்சி விமான நிலையத்தின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share