மின் இணைப்புடன் ஆதார் எண்: செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!

தமிழகம்

மின் கட்டணம் செலுத்துவதற்கு ஆதார் எண்ணை இணைக்க அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில்‌ உள்ள வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்‌ விவசாய மின்‌ இணைப்புதாரர்களின் மின்‌ இணைப்பு எண், அவர்களது ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் இதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 26) துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகமானது தமிழகத்தில்‌ உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலங்களிலும்‌ வருகின்ற நவம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

பண்டிகை தினங்கள்‌ தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும்‌ காலை 10.30 மணி முதல்‌ மாலை 05.15 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள்‌ செயல்படும்‌.
பொதுமக்கள்‌ இந்த தருணத்தினை பயன்படுத்திக்‌ கொண்டு சிறப்பு முகாம்கள்‌ மூலம்‌ தங்களது மின்‌ இணைப்பு எண்ணினை ஆதாருடன்‌ இணைத்துக்‌ கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

டிசம்பர் வரை பொதுமக்கள்‌ அனைவரும்‌ தங்களது மின்‌ கட்டணத்தை எவ்வித சிரமமும்‌ இன்றி ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி செலுத்தலாம்‌. அதற்கு எவ்வித இடையூறும் இல்லை.

தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகமானது ஏற்கனவே பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தும்‌ பொருட்டு மின்‌ நுகர்வோர்களின்‌ தொலைபேசி எண்களை மின்‌ இணைப்புடன்‌ இணைத்துள்ளது.

இதன்‌ தொடர்ச்சியாக, தற்பொழுது வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்‌ விவசாய மின்‌ இணைப்புகளை பெற்றிருக்கும்‌ மின்‌ நுகர்வோர்கள்‌ பற்றிய விவரங்களைப் புதுப்பிக்கும்‌ பொருட்டு அவர்களது மின்‌ இணைப்பு எண்ணை ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணியை மேற்கொண்டுள்ளது.

aadhar link with electricity bill senthil balaji announcement

இவ்வாறு ஆதாரை இணைக்கும்‌ பொழுது தற்போதுள்ள மின்‌ இணைப்பு உரிமைதாரர்கள்‌ பற்றிய விவரம்‌ கிடைக்கப்‌ பெறுவதோடு, ஏற்கனவே பெயர்‌ மாற்றம்‌ செய்யப்படாமல்‌ இறந்து போன/ பழைய மின்‌ இணைப்பு உரிமைதாரர்களின்‌ பெயர்களில்‌ இருக்கும்‌ மின்‌ இணைப்புகளை தற்போதுள்ள மின்‌ இணைப்பு உரிமைதாரர்களுக்கு தகுந்த ஆவணங்களின்படி பெயர்‌ மாற்றம்‌ செய்து கொள்வதற்கும்‌ இத்திட்டம்‌ வழிவகை செய்கிறது.

இதனால்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்திற்கு மின்‌ இணைப்பு உரிமையாளர்கள்‌ பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்கள்‌ கிடைக்கப்பெறும்‌.
மின்‌ இணைப்பு எண்ணை ஆதாருடன்‌ இணைப்பதினால்‌ வீடுகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும்‌ 100 யூனிட்‌ இலவச மின்சாரத்தில்‌ எவ்வித மாற்றமும்‌ இல்லை.

அதேபோன்று, கைத்தறி மற்றும்‌ விசைத்தறி மின்‌ நுகர்வோர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும்‌ மானியமும்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. குடிசை மற்றும்‌ விவசாய மின்‌ இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும்‌ இலவச மின்சாரமும்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌.

ஆதாரை இணைப்பதினால்‌ மின்‌ நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ இலவச மின்சாரம்‌ மற்றும்‌ மானியத்தில்‌ எவ்வித பாதிப்புக்களும்‌ ஏற்படாது” எனத்‌ தெரிவித்துள்ளார்.

மோனிஷா

உலகளவில் அதிகம் தேடப்பட்ட பிரபல நடிகை!

“தவறு செய்தால் காப்பாற்றமாட்டோம்”: அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *