ஆதார் இணைப்பு: இலவச மின்சார திட்டம் ரத்து ஆகுமா?

Published On:

| By Kavi

மின்  இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைப்பதால் இலவச மின்சார திட்டம் ரத்து ஆகுமா என்ற கேள்விக்கு  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராகப் பதவியேற்ற அன்றே, 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் கீழ் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மின்  இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி, மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,816 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பலரும் அவசர அவசரமாக ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர்.  மேலும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை வரும் 31ஆம் தேதி வரை இணைக்கலாம் என அரசு கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது.

இந்த  மின்  இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைப்பதால் இலவச மின்சார திட்டம் ரத்து ஆகும் என்கிற கருத்து மக்களிடம் வலுத்துவரும் நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது.

மின்  இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் தேவையில்லை. விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மின்சார துறையை மேம்படுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ரூ.9,048 கோடி மானியம் வழங்கினார். இந்தாண்டு கூடுதலாக ரூ.4,000 கோடி மானியத்தை வழங்கியுள்ளார். இதனால் இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ராஜ்

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா!

கோவை: பெண்களுக்கு மட்டும் வாரிசு சிறப்பு காட்சி!

https://minnambalam.com/tamil-nadu/appreciation-ceremony-for-cleanliness-workers-in-monsoon-rain/

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share