மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகத்தில் மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணோடு கட்டாயமாக ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது ஆதாரை இணைக்காதவர்கள் மின்சார கட்டணத்தை பெற்றுக் கொள்ள முடியாது என பல இடங்களில் மறுக்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதோடு, மின்சார இணைப்பு துண்டிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி உரிய தேதியில் பணம் கட்டாமல் பின்னர் அபராதக் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டிய நெருக்கடிக்கு மக்கள் உள்ளாவார்கள்.
ஏற்கனவே மின் கட்டண உயர்வால் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு ஆதாரை இணைக்கும் முடிவினை திரும்ப பெற வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழ்நாடு மின்வாரியத்தை வலியுறுத்துகிறது” என்று அதில் கூறியுள்ளார்.
-ராஜ்
சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறையும்: அமைச்சர் எ.வ.வேலு
கிச்சன் கீர்த்தனா : வல்லாரை தொக்கு