ஆதார் இணைப்பு: மக்களை வஞ்சிப்பது தி.மு.க-வின் வாடிக்கை – அண்ணாமலை

Published On:

| By Minnambalam

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியிருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதிவரை நீட்டித்திருக்கிறது. அதற்கென சிறப்பு முகாம்களை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்து, ‘மக்களை வஞ்சிப்பது தி.மு.க-வின் வாடிக்கை’ என பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அண்ணாமலை, “தமிழக அரசின் மானியம் பெற மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அவசர கதியாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மின்சாரக் கட்டணத்தை 50 சதவிகிதம் வரை உயர்த்தி, பொதுமக்களை வஞ்சித்த திறனற்ற தி. மு. க அரசு, மீண்டும் ஆதார் இணைப்புக்கு போதுமான அவகாசம் கொடுக்காமல் பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கியிருக்கிறது. 

என்ன காரணத்துக்காக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற விளக்கம் சொல்லாமல், ஆதார் எண்ணை இணைக்கா விட்டால், மின் கட்டணம் செலுத்த முடியாது என்று அறிவித்த தி. மு. க அரசு,

பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு சற்று பின்வாங்கி, டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்கா விட்டாலும் மின்சாரக் கட்டணம் செலுத்தலாம் என கண்துடைப்புக்காக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்திலுள்ள மின் பயனாளிகளுக்கு, சத்தம் இல்லாமல் ஒரு புதிய கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது.

அதாவது, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துக்கொண்டிருக்கும் மக்கள் இனி அவர்களின் கட்டடத்துக்குள்ளேயே இருக்கும் மாடிப்படி, நடைபாதை, வராண்டா, புல்வெளிகள், பொது இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு, விதிக்கப்படும் கட்டணம் 1,500 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

அதாவது குடியிருப்பில் இருந்தாலும், தொழிற்சாலைக்கான கட்டணம் போல, யூனிட் ஒன்றுக்கு எட்டு ரூபாய் அளவில் புதிய கட்டணம் விதிக்கப்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட வலைதளமும் கடந்த சில நாள்களாக முடங்கிக் கிடக்கிறது.

Aadhaar link DMK habit of deceiving people Annamalai

அதற்காக மின்சார வாரிய அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வரிசைகளும் மூடப்பட்டிருக்கின்றன.

மத்திய அரசின் மானியத் தொகை பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க, மத்திய அரசு ஒரு ஆண்டுக்கும் மேல் அவகாசம் கொடுத்திருந்தது.

ஆனால் அப்படி எந்தக் கால அவகாசமும் கொடுக்காமல், காரணமும் சொல்லாமல், திடீரென மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தி.மு.க அரசு.

எனவே, தி. மு. க அரசு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் அதுவரை மின் கட்டணம் செலுத்துவதிலோ மின்சார இணைப்பிலோ எந்தச் சிக்கலும் உருவாக்கி, பொதுமக்களை வஞ்சிக்கக் கூடாது எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

-ராஜ்

“தி காஷ்மீர் பைல்ஸ் ஒரு வல்கர் படம்” : விருது குழு தலைவர்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share