கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறை, கடந்த 1872-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.
சிறை வளாகத்தில் ஆண்கள் சிறை, பெண்கள் சிறை தனித்தனியே அமைந்துள்ளது. ஆண்கள் சிறையில் 2,000-க்கும் மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 50-க்கும் மேற்பட்டோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை சரக சிறைத்துறை டிஐஜி மேற்பார்வையில், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.
கோவை மத்திய சிறையை இடமாற்றம் செய்து விட்டு, இந்த வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன.
அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திமுக அரசு அமைந்ததைத் தொடர்ந்து சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மத்திய சிறையை காரமடை அருகே இடமாற்றம் செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. முதல்கட்டமாக செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது செம்மொழிப் பூங்காவுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள மாநகராட்சி அதிகாரிகள்,
‘‘இயற்கையை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு கல்வி ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு பயன்பெறும் வகையிலும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த பொழுதுபோக்குக்கு பயன்பெறும் வகையிலும் உலகத் தரத்தில் இப்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
பூங்காவில் வரலாற்று சிறப்புகளை அறியும் வகையில் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மர வனம் ஆகியவை அமைகின்றன.
பூங்காக்களின் வகை, அதன் தன்மைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மகரந்தப் பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகைப் பூங்கா போன்ற பல வகையில் 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்தப் பூங்கா வளாகத்தில் மண்டபங்கள், உள்ளரங்கம், வெளியரங்கம், பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறைகள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி செய்யும் கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.
செம்மொழிப் பூங்காவில் பல அடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்கும் திட்டம் உள்ளது. பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், ‘‘செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி தற்போது வரை 17 சதவீதம் முடிந்துள்ளது. தொடர்ந்து பணிகள் நடக்கின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சீட் ஸ்நாக்ஸ்
கடைசி நேரத்தில் கேன்சல் – அப்டேட் குமாரு
நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் அவதூறு… டிஜிபிக்கு நோட்டீஸ்!
ஜாமீன் நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்