உதவி காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ) பணிக்கான எழுத்து தேர்வு எழுதச் சென்ற போலீஸ்காரரின் மனைவி, துண்டுச்சீட்டு வைத்திருந்து சிக்கியுள்ள சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023ஆம் ஆண்டுக்கான காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான காலி பணியிடங்களை அறிவித்திருந்தது.
இதற்காக 621 காலி பணியிடங்களும்; நிலைய அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு சுமார் 128 காலி பணியிடங்களுக்கும் என மொத்தம் 749 இடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் காவல்துறை சார்ந்த 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களும் தனியாக தேர்வு எழுதினர். காலையில் முதன்மை எழுத்து தேர்வும், மதியம் தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வும் நடைபெற்றிருக்கிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆறு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றிருக்கிறது. இதில் பெண் தேர்வர்களுக்காக தனியார் மகளிர் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு தேர்வராக லாவண்யா தேர்வு எழுதியுள்ளார். அப்போது தேர்வு நேரத்துக்கு இடையே கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டிருக்கிறார்.
அவர் கர்ப்பமுற்றிருந்ததால், இரண்டு பெண் காவலர்கள் உதவியுடன் கழிவறைக்குச் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறிது நேரத்தில் தேர்வறைக்கு திரும்பியவர் மீண்டும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அவர் துண்டு சீட்டு வைத்திருந்ததை அறையில் கண்காணிப்புப் பணியிலிருந்த காவல் அதிகாரி கண்டறிந்துள்ளார்.
அதில் உள்ள குறிப்புகள், கேள்வித்தாளில் உள்ள வினாக்களுக்கான சரியான விடையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தீவிர சோதனைக்குப் பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம், துண்டு சீட்டு வந்தது எப்படி, போலீஸார் யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாவண்யாவின் கணவர் இதற்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி, தற்போது சென்னையில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவருடைய உறவினர் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு எழுதச் சென்ற பெண், ‘பிட்’ அடித்து சிக்கியுள்ள சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பு : Rites நிறுவனத்தில் பணி!
முதலமைச்சரா…. பிரதமரா… பாவம் அவரே குழம்பிட்டாரு: அப்டேட் குமாரு