பன்றிகளுக்குப் பரவிய வைரஸ்! அலெர்ட் ஆன அரசு!

தமிழகம்

இன்றைய உலகம், புதிதாய் உருவாகும் பல நோய்த் தொற்றுக்களாலேயே அழிந்துகொண்டிருக்கிறது. அதற்கு முதல் உதாரணம் கொரோனா. அது, ஏற்படுத்திய சுவடுகள் கொஞ்சநஞ்சமல்ல. 2019ல் சீனாவில் உருவான கொரோனா தொற்று, இன்று அது பல வகைகளில் வடிவம் பெற்று இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தவிர, பல உயிர்களையும் மாய்த்துக்கொண்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் குரங்கு அம்மை, ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட நோய்களாலும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஆந்த்ராக்ஸ் கிருமியால் அம்மாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கேரளா மாநிலம் அதிரப் பள்ளி வனப்பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை, நாள்தோறும் அதிகரித்தப்படியே உள்ளது.

இந்த நிலையில், இதன் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் இறந்துகிடந்ததாகவும், அவற்றைச் சோதித்துப் பார்த்ததில், அவைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இறந்த பன்றிகளை மீட்டு பரிசோதனை மேற்கொண்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆந்தராக்ஸ் பாதிப்பானது விலங்குகள் இடையே தீவிரமாகப் பரவும் என்பதால் மற்ற விலங்குகளுக்கும் பரவாமல் இருக்க அம்மாநில சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளது.

தமிழகத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் இல்லையென்றாலும், கடந்த மார்ச் மாதம் சென்னை ஐஐடி வளாகத்தில் உயிரிழந்த நான்கு மான்களில் ஒரு மானுக்கு ஆந்தராக்ஸ் நோய் தாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1850ம் ஆண்டு அறிவியல்பூர்வமாக கண்டறியப்பட்ட இந்த ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரியானது, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தைத் தரக்கூடியது. இது தாவரங்கள் மற்றும் விலங்குகளை உண்ணக்கூடிய பாலூட்டிகளுக்கு மட்டுமே ஏற்படும் நோயாக இருந்தாலும், நோயுற்ற விலங்குகளை மனிதன் கையாளும்போது அவர்களுக்கும் எளிதில் பரவிவிடும்.

மேலும், இந்த நோயுற்று இறந்த விலங்கை உண்ணுவதாலும், ரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் கடியாலும் மற்ற விலங்குகளுக்கும் பரவுகிறது. மனிதர்களைப் பொறுத்தவரை தோல் வியாதி, நுரையீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு என 3 விதங்களில் ஆந்த்ராக்ஸ் நோய் ஏற்படுகிறது. சுவாசம் மூலமாக கிருமிகள் நுரையீரலை அடைந்தால் ஏற்படும் பாதிப்புதான் சற்று அபாயகரமானது. இதுகுறித்து மனிதர்கள் பயப்படத் தேவையில்லை என்றாலும், பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியது என மருத்துவத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

-ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *