கபடி விளையாடியபோது உயிரிழந்த வாலிபர்!

Published On:

| By Jegadeesh

கடலூர் மாவட்டம் முத்தாண்டி குப்பத்தை அடுத்த புறங்கனி பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ் ( 20 ) . இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று (ஜூலை 24) இரவு கடலூர் மாணடிக்குப்பம் பகுதியில் கபடி போட்டி நடைபெற்றது . இதற்காகவே ஊருக்கு வந்த விமல்ராஜ், இந்த போட்டியில் கீழகுப்பம் அணியை எதிர்த்து , புறங்கனி அணி சார்பாக களம் இறங்கினார்.

அப்போது அவர் ரைடு சென்றபோது எதிர்பாராத விதமாக மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தாண்டி குப்பம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கபடி போட்டியின்போதே கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel