ஸ்ரீராம் சர்மா A Review of Vallalar’s Principles
வள்ளலார் ! A Review of Vallalar’s Principles
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” எனும் சொற்றொடர் மட்டும்தான் அவரது அடையாளமாக பரவலாக அறியப்பட்டு வருகின்றது.
அதுமட்டும்தான் அவரது பூரணமான அடையாளமா எனில் இல்லை !
ஊன்றிப் படிக்கப் படிக்க அடியேனது மனதில் அற்புதமானதொரு காட்சிக் கவியாகவே மிளிர்கிறார் நமது அருட்பிரகாச வள்ளலார்.
கவி புனைவதில் இருவகை உண்டு.
ஒன்று, கொண்ட கருத்தை அப்படியே வெளிப்படுத்துவது. இரண்டு, அதைக் காட்சிப்படுத்திப் புனைவது. ஆங்கிலத்தில் அதை Visualized Writing என்பார்கள்.
உதாரணத்துக்கு, கண்ணதாசன் பாடல்களைக் காண்போம்.
“போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?”
மேற்கண்ட வரிகளானது, கவிமனதில் தோன்றிய விரக்தி தோய்ந்த கருத்தை அப்படியே வெளிப்படுத்துவதாகும்.
“கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே”
மேற்கண்ட வரிகளானது, தோன்றிய கருத்தில் ஆழத் தோய்ந்து அதைக் காட்சிப்படுத்தி கடத்துவது ஆகும்.
கம்பர், ஆண்டாள், மகாகவி பாரதி போன்றவர்களின் பெரும்பாலான படைப்புகளில் இந்தக் காட்சிப்படுத்தலை நம்மால் காண முடிகிறது.
1882 ல் தோன்றிய மகாகவி பாரதியாரின் காட்சி வடிவ கவிதைகளுக்கு முன்னோடியானதாக அமைந்தது அவருக்கு முன்பு, 1867 ல் தோன்றிய இராமலிங்க அடிகளாரது காட்சி வடிவம் சுமந்த எழுத்தாகும்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பாவில் அமையப் பெற்ற வள்ளலாரது பாடல் ஒன்றில் மறைந்திருக்குமோர் அற்புதக் காட்சியை, அதன் வீச்சை ஏதோ என்னளவில் விரித்துரைக்க முயல்கிறேன்!
*******

வள்ளலார் சுவாமிகள் தன் ஊணில் உதிரத்தில் உணர்வில் இரண்டறக் கலந்து நின்ற ஈசனை எண்ணி எண்ணி நெக்குருகிபடி எழுதிய காட்சிக் கவி இது.
“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே; தருநிழலே; நிழல்கனிந்த கனியே !
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே !
உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே !”
மேற்கண்ட காட்சிக் கவியின் விரி பொருளானது.. A Review of Vallalar’s Principles
சுள்ளென வெயில் வீசுமோர் கோடைக் காலமாம் அது. ஆளரவமற்ற கட்டாந்தரை கொண்ட வனாந்தரமாம். ஆங்கே, செய்வதறியாது தத்தளித்த ஒருவன் திடுமெனத் தான் கண்டதோர் சுகத்தை இப்படியாக விரித்துரைக்கிறானாம்.
ஈசா, ஈசா… சுட்டெரிக்கும் வெயிலில் தத்தளிக்கும் ஏழையேன் கண்ணில் ‘அம்மவோ’ வென அகப்பட்டதொரு மரத்துக்கு ஒப்பானவனே! A Review of Vallalar’s Principles
அதுவும், மொட்டை மரமாக இல்லாது குளிர்ந்த நிழல் தரும் கோகனக மரமாக நின்ற பாரிய ஆதரவுக்கு நேரியனே! மேலும். அந்த நிழலில் என் பசிக்கு உணவாக கனிந்து தொங்கும் கனியினைப் போல தழைந்து நின்றவனே!
அந்தக் கனியினை சுவைத்த பின் தாகம் மேலிடுமானால் அது தணிக்க ஆங்கே ஓடையாய் ஊறிவரும் மெல்லிய தண்ணீராகவும் தோன்றியவனே!
மேலும் அந்தத் தண்ணீரில் சுகந்தமணம் வீசியபடி ஆங்காங்கே மலர்ந்து அசைந்தாடும் வண்ண வண்ண மலராகவும் படர்ந்திருந்து என்னை உற்சாகப்படுத்தி அரவணைப்பவனே !
இப்படியாக காட்சிப் படுத்தும் வள்ளலார் அடுத்த கட்டம் ஏறி வீசுகிறார்..
“மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே !”
அடடா ! அடடா ! A Review of Vallalar’s Principles
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே ! என ஏன் மொழிகிறார் ?
கவனியுங்கள்.. A Review of Vallalar’s Principles
சமதளத்தில் வீசும் தென்றல் காற்று சில சமயங்களில் பலனளிக்காமல் போகக் கூடும்.
ஆம், ஆங்காங்கே வளர்ந்து நிற்கும் செடிகளும் கொடிகளும் அதனை வழிமறித்து நிற்கக் கூடும். அது, வீசும் தென்றல் காற்றைத் தடுத்து விடக் கூடும்.
ஆனால், சற்றே உயரமான மேடையில் ஒருவர் நிற்பாறேயானால் அந்தக் தென்றல் காற்றானது எந்தவிதமான தடைகளும் இல்லாது நேராக வந்து அவர் மேல் வந்து வந்து சன்னமாக மோதும். திகட்டாத சுகம் விளைவிக்கும்.
அப்படியானதொரு மேடையைப் போட்டு அதில் என்னை ஏற்றி நிற்க வைத்து அதன் பின் தென்றலை அனுப்பி வைத்த ஈசா உன் கருணையே என்னவென்று போற்றி நெகிழ்வேன் எனக் கசிந்துருகிறார் வள்ளலார்.
அந்தக் காட்சிக் கவி அடுத்து, A Review of Vallalar’s Principles
“மென்காற்றில் விளை சுகமே; சுகத்தில் உறும் பயனே !” என்கிறார்.
மென் காற்றில் என்ன சுகம் விளையும்? என்னவிதமான பயன் விளையும் ?
வீசுகின்ற தென்றல் தலைமுடியினை கோதி கோதி விட மனம் ஆனந்த வயப்படும். அமைதியுறும். கொண்ட கவலைகள் மறையும். இக வாழ்வில் சிக்குண்டு வாழும் பாரம் குறையும். பஞ்சமா பாதகங்களிலிருந்து மனம் விடுபடும்.
எல்லாவற்றையும் விட அது படைப்பாற்றலை அதிகப்படுத்தித் தரும்.
“ஆடையிலே எனை மணந்த மணவாளா”
ஈசா, ஏதும் அறியாத எனது குழந்தைப் பருவத்திலேயே நீ எனை ஆட்கொண்டு விட்டாய்.
அப்படி நேராது போயிருக்குனால் எனக்கு அறிவு வளர்ந்திருக்கும். வளருகின்ற அறிவில் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அந்தக் குழப்பத்தால் அநாவசியமான கேள்விகள் பல எழுந்திருக்கும்.
கேள்விகளுக்கு பதில் தேடித் தேடி ஆதி மூலத்தைக் குறித்த குழப்பங்கள் இன்னமும் கூடியிருக்கக் கூடும். அந்த ஆபத்தை எல்லாம் தவிர்த்து என் மேல் கருணை வைத்து சலனமற்ற பருவமாம் குழந்தைப் பருவத்திலேயே என்னை ஆட்கொண்டவனே, உன் கருணை மிகப்பெரிது என நெகிழ்கிறார் வள்ளலார்.
“அஞ்சு வயதினிலே
அறியாப் பருவத்திலே
பிஞ்சிலே கூடினேன்டி – கிளியே
பிரிய மனம் கூடுதில்லையே” எனும் அவருக்கு முன்பே தோன்றி எழுதிய கிளிகண்ணி சித்தரின் பாடலை எதிரொலிக்கிறார் போலும்…
“பொதுவில் ஆடுகின்ற அரசே ! என் அலங்கல் அணிந்தருளே !”
பொதுவில் என்பதை நாம் நடுவில் எனக் கொள்ள வேண்டும்.
உலகப் பந்தின் நடுநாயகமானது சிதம்பரம் எனும் சைவ ஸ்தலம் ஆகும் என்பது சைவக் குரிசிலோர்களின் துணிபு.
அந்தப் பொது மேடையில் இடது காலை உயர்த்தி வைத்து ஆடுகின்ற பரத நாயகனாக சிதம்பர நாதனாக எனை ஆளும் அரசே என சிரம் தாழ்ந்து பணிகிறார் மகா காட்சிக் கவியாம் இராமலிங்கனார்.
“என் அலங்கல் அணிந்தருளே”
அலங்கல் என்பற்கு மாலை எனப் பொருள். A Review of Vallalar’s Principles
தமிழ் தோய்ந்த என் பாமாலையை உனக்கு அணிவிக்கிறேன். மனமுவந்து அதனை ஏற்று எனக்கு அருள் செய்யேன் ஈசா ! என மன்றாடி இறைஞ்சுகிறார் வடலூரார்.
புகழுடைய பாடகரான எஸ்.ஜி. கிட்டப்பா அவர்கள் அந்த நாளில் இந்தப் பாடலை ராகமாலிகையாக உருகி உருகிப் பாடியிருக்கிறார்.
வலை தளத்தில் கேட்கக் கிடைக்கும் இந்தப் பாடலை மெல்ல விழிகளை மூடிக் கேட்டுப் பாருங்கள்.
அன்றந்த நாளில் இந்தக் காட்சிக் கவியை எழுதும் போது அருட்பிரகாச வள்ளலார் ஐயா எவ்வாறெல்லாம் தன் உள் மனதுக்குள் ஆனந்தமாக குதித்துக் கொண்டாடியிருப்பார் என்பதை உள்ளோடி உணர முடியும். மனம், அனிச்சப் பறவையின் சிறகையும் விட மிக லேசாகும். ஆனந்தமாய் சிறகடிக்கும்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தமிழன்னையைப் போலவொரு ஞானப் பணக்காரி இந்த நீளுலகில் இல்லை. இல்லவே இல்லை!

அவளுக்கு அழியாத சொத்துக்களை சேர்த்து வைத்த மகானுபாவர்களை மனதார வணங்கிப் போற்றுவது வழியோடிகளான நமது கடமையாகும்.
திராவிடத் தமிழ் மண்ணில் வள்ளலாரது முப்பெரும் விழாவினை மனமுவந்து கொண்டாடி ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கச் சொன்ன தமிழக அரசாங்கத்தையும் நமது முதலமைச்சரையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்!
வாழிய பாடி அமைகிறேன் காட்சிக் கவி வடலூரார் பெருமானுக்கு !
*******
கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.