நவம்பர் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இது 10,11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர், “தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து தீவிர பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 12 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னை தண்டையார்பேட்டையில் 14 செ.மீ, சென்னை டிஜிபி அலுவலகம் மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று(நவம்பர் 3) தமிழகத்தில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு திசையில் நகர்ந்து தற்போது கேரளா பகுதியின் மீது நிலவுகிறது.
அடுத்து வரும் மூன்று தினங்களை பொறுத்தவரையில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்துவரும் 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தற்போதைய வானிலை நிலவரப்படி வரும் நவம்பர் 9ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
இது 10,11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் நகர்வு மற்றும் வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும்.
மீனவர்கள் 8, 9ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறினார்.
கலை.ரா