கடந்த 1970 ஆம் ஆண்டு வாக்கில் இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அலகொல பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தில் சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதி பணியாற்றினர்.
ஒரு கட்டத்தில் அந்த பகுதியில் இருந்து வேறு இடத்துக்கு மாறியுள்ளனர். அப்போது, உதவியாக அருகில் வசித்த ரஞ்சித் என்ற சிறுவனை வீட்டிலுள்ள பொருட்களை எடுத்து வண்டியில் வைக்க உதவிக்கு அழைத்துள்ளனர். உதவிக்கு வந்த சிறுவன் ரஞ்சித், படுக்கையில் தலையணைக்கு கீழ் இருந்த 37.50 ரூபாயை திருடியுள்ளார்.
கொடுமையான வறுமை நிலவிய காலக்கட்டம் அது. அந்த கால கட்டத்தில் அது பெரும் தொகை. பணத்தை எடுத்தாயா? என்று எழுவாய், ரஞ்சித்திடம் கேட்டபோது தனக்கு தெரியாது என்று பதில் கூறியுள்ளார்.
பின்னர், பிழைப்பு தேடி சிறுவயதிலேயே ரஞ்சித் தமிழகம் வந்துள்ளார். இங்கு பல இடங்களில் வேலை பார்த்து அடி வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் உயர தொடங்கினார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். பின்னர், சொந்தமாகவே ரஞ்சித் பிளஸ்சிங் கேட்டரிங் என்ற பெயரில் தனி நிறுவனத்தை தொடங்கினார். இப்போது, அவரிடத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ரஞ்சித், பைபிள் படித்திருக்கின்றார் .
அதில் “துன்மார்க்கன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் போகிறான். நீதிமான் இறங்கிச் சென்று திரும்பக் கொடுக்கிறான்” என்று சொல்லப்பட்டிருந்த வசனம் ரஞ்சித்தின் மனதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறு வயதில் தான் செய்த அத்தனை தில்லாலங்கடித்தனத்தையும் மனதில் அசை போட்டுள்ளார். யார் யாரிடம் கடன் வாங்கினார், திருடினார் என்பதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்துள்ளார். இதையடுத்து, தனது கடன்களையெல்லாம் அடைக்க முடிவு செய்தார்.
புளியம்பட்டியில் பாய் கடையில் லுங்கி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றியது, பெட்டிக்கடை கடன் உள்ளிட்டவற்றை வட்டியுடன் திருப்பி கொடுத்துள்ளார்.
இத்தனை கடன்களை, திருப்பி கொடுத்த ரஞ்சித்துக்கு தன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய எழுவாய் வீட்டில் திருடிய பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லையே என்று குறை மட்டும் வாட்டி வதைத்துள்ளது. அவர், தற்போது இருக்க மாட்டார் என்றாலும், அவர்களின் சந்ததியினரிடத்தில் பணத்தை கொடுக்க ரஞ்சித் முடிவு செய்தார்.
இதற்கிடையே, இலங்கை உள்நாட்டு போர், வறுமையால் சுப்ரமணியம் – எழுவாயின் சந்ததிகள் சிதறியிருக்கின்றனர். தொடர் முயற்சிக்கு பிறகு ஒருவழியாக சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதியின் வாரிசுகளை ரஞ்சித் கண்டுபிடித்தார்.
எழுவாய் தம்பதிக்கு முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் 3 மகன்களும் செல்லம்மாள் என்ற மகளும் இருந்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை திருடியதனையும், அதனை திருப்பி தரவும் விரும்புவதாகவும் ரஞ்சித் தெவித்திருக்கின்றார் .
பின்னர், இலங்கைக்கு சென்று பழனியாண்டி, கிருஷ்ணன் மற்றும் இறந்து போன முருகையாவின் வாரிசுகளுக்கு புத்தாடைகள் எடுத்து கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 70 ஆயிரம் ரூபாய் பணத்தை ரஞ்சித் கொடுத்துள்ளார். அதே வேளையில், செல்லம்மாளின் குடும்பத்தினர் திருச்சியில் இருப்பதை கண்டுபிடித்து அவர்களுக்கும் 70 ஆயிரம் பணமும் புத்தாடைகளும் எடுத்து கொடுத்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நேரத்தில், தொழிலதிபர் ரஞ்சித் கொடுத்த பணம் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்கு உதவியாக இருப்பதாக சுப்ரமணியம் – எழுவாய் சந்ததிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். கோவை தொழிலதிபர் ரஞ்சித்தின் செயல் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா?